வென்று அவன் நாட்டைக் கைப்பற்றினான். எனினும், அவன் விரிந்த இதயத்தினனாய்க் கோப்பெருஞ்சிங்கனுக்கே மணிமுடியை வழங்கி அவனுடைய நட்பைப் பெற்றான். காடவர்கோனும் பாண்டியரின்கீழ் ஒரு சிற்றரசனாக ஆட்சி புரிந்துவர ஒப்புக்கொண்டான். சடையவர்மன், கோப்பெருஞ்சிங்கன்மேல் தான் கொண்ட வெற்றியைச் சிதம்பரத்தில் கொண்டாடி நடராசாவுக்குத் தன் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டான். அங்கிருந்து அவன் திருவரங்கம் சென்று துலாபாரங்கன் செய்தான். அடுத்து சடையவர்மனுடைய நோக்கம் சிங்களத்தின்மேல் பாய்ந்தது. அவன் இலங்கையின்மேல் படையெடுத்துக் கி.பி. 1254-56 ஆண்டுகளில் அத் தீவின் வடபகுதியைக் கைப்பற்றினான். தான் அரியணை ஏறிய ஆறாண்டுக்குள் பாண்டிநாட்டு மேலாட்சியைச் சேரர், போசளர், சோழர், காடவர், சிங்களர் ஆகியவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குச் சடையவர்மனின் படைபலச் செல்வாக்கானது அவனை உயர்த்திக்கொண்டே போயிற்று. அவனுடைய ஆட்சியானது தெற்கில் திருவிதாங்கூரிலிருந்து வடக்கில் தென்னார்க்காடு மாவட்டம் வரையில் பரவியிருந்தது. சடையவர்மனின் திக்கு விசயம் ஓயவில்லை. அவன் தெலுங்குச் சோடமன்னன் கண்டகோபாலன்மேல் அணிவகுத்துச் சென்று அவனை ஒரு போரில் முறியடித்துக் கொன்றான். அடுத்துக் காகதீயன் கணபதியை வென்று காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான். தொடர்ந்து சடையவர்மன் நெல்லூரையும் கைப்பற்றி அங்கு வீராபிடேகம் செய்து கொண்டு வெற்றிவிழாக் கொண்டாடினான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரசியல் திறன் வாய்க்கப் பெற்றவன்; அரைகுறையாக எதையும் விட்டு வைப்பவனல்லன். பொன்னி நாட்டைத் தன் கன்னி நாட்டுடன் இணைத்துக் கொண்டான். பல வெற்றி விருதுகளையும் அவன் அவ்வப்போது தன் பெயருடன் இணைத்துக் கொண்டான். சமஸ்தஜகதா தாரன், எம் மண்டலமும் கொண்டருளிய, ஹேமாச்சாதனா ராஜா, மகாராசாதிராச-ஸ்ரீபரமேசுவர, மரகதப் பிருதிவி பிரித்புரங் கொண்டான், எல்லாந் தலையானான் என்பன அவன், பூண்டு மகிழ்ந்த விருதுகள். அவன் திருவரங்கத்திலும் முடிசூட்டு விழா ஒன்றைக் கொண்டாடினான். சிதம்பரம், திருவரங்கம் கோயில்களுக்குப் பொன் வேய்ந்தான். சிதம்பரத்தில் பொன்னம்பலம் ஒன்று கட்டினான். திருவரங்கம் கோயிலுக்குப் பதினெண் நூறாயிரம் பொன் தானமாகக் கொடுத்தான். அவன் வெற்றி வீரனாகவும் மாபெரும் வள்ளலாகவும் திகழ்ந்தான். |