சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அவனுடன் இருந்து, வேறு பாண்டியர் நால்வர் அரசாண்டு வந்தனர் என்று மார்க்கோ போலோ (Marco Polo) என்ற வழிப்போக்கர் கூறுகின்றார். ஆனால், வாசாப் (Wassaf) என்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர், மூவர் பாண்டியர்கள் தனித்தனியாகவும் சுதந்தரமாகவும் ஆண்டு வந்தனர் என்று எழுதுகின்றார். ஆனால், பாண்டி நாடானது ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததற்கு ஒரே சமயத்தில் ஐவர் மன்னர்கள் ஒரு நாட்டை ஆண்டனர் என்பது இயலாத செயலாகும். சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சியில் சில இளவரசரும் பங்கு கொண்டனர் என்று ஊகிக்க வேண்டியுள்ளது. அவர்களுள் சடையவர்மன் வீரபாண்டியன் நாட்டாட்சியில் மிகவும் பெருமளவு ஈடுபாடு கொண்டிருந்தனன் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268-1310) சடையவர்மன் சுந்தரபாண்டியனை யடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டிக் கொண்டான். பாண்டியப் பேரரசின் அரசியலில் இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய இளவரசர்கள் மூவர் பங்கு கொண்டனர். அவர்களுள் மாறவர்மன் விக்கிரமனும், சடையவர்மன் சுந்தரபாண்டியனும் குலசேகரனின் மக்கள் . மாறவர்மன் குலசேகரன் ‘எம் மண்டலமும் கொண்டருளிய’, ‘கோனேரின்மை கொண்டான்’, ‘கொல்லங் கொண்டான்’ என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், தொண்டை மண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை அவன் வென்றான் என்று அவன் காலத்திய கல்வெட்டுகள் கூறுகின்றன. அவன் மூன்றாம் இராசேந்திரன் மேலும், போசள இராமநாதன் மேலும் வெற்றி கொண்டான் (கி.பி. 1279); அவர்களுடைய நாடுகளைப் பாண்டி நாட்டுடன் இணைத்துக் கொண்டான். சிங்களத்தில் அரசியற் கலகம் ஒன்று ஏற்பட்டது (கி.பி. 1283-1302). குலசேகரன் அந்த அரிய வாய்ப்பை நழுவவிடவில்லை. அவனுடைய படைத்தலைவன் ஆரிய சக்கரவர்த்தி என்பான் சிங்களத்தின்மேல் படை எடுத்தான் (கி.பி. 1284). அவன் புத்தரின் பல் சின்னம் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு மீண்டான். மூன்றாம் பராக்கிரமபாகு (கி.பி. 1302-1310) என்னும் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப் புனித சின்னத்தை மீட்டுக் கொண்டு சென்றான். |