பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 385

     வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ பாண்டி
நாட்டுக்கு வந்து சுற்றுப்பயணம் செய்து தன் நூலில் அதைப்பற்றிய
குறிப்புகளைக் கொடுத்துள்ளான். பாண்டிய நாடு இந்தியாவிலேயே மிகச்
சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை
ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன்
‘சொண்டர் பாண்டிடாவர் (சுந்தரபாண்டி தேவர்) என்பவன் முடிசூடிய
மன்னன் என்றும், பாண்டிய நாட்டில் மிகப் பெரிய, வனப்பு மிக்க முத்துகள்
கிடைத்தன என்றும், தாமிரவருணியின் கூடல் முகத்தில் இருக்கும்
காயல்பட்டினம் மிகப் பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன்,
அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பல
பண்டங்களையும் ஏற்றிக்கொண்டு வந்த மரக்கலங்கள் அனைத்தும் காயலுக்கு
வந்துதான் போகின்றன என்றும், காயல்பட்டினத்தில் வாணிகம் செழித்தோங்கி
நடைபெற்று வந்ததாயும், பாண்டிய மன்னனிடம் அளவுகடந்த பொன்னும்
மணியும் குவிந்து கிடந்தன என்றும், அவன் நீதியுடனும் நேர்மையுடனும்
ஆட்சிபுரிந்து வந்தான் என்றும், அவன் அயல்நாட்டு வணிகரிடம் மிகுதியும்
கண்ணோட்டம் உடையவன் என்றும், மார்க்கோ போலோவின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. மற்றும் பாண்டிய மன்னனுக்கு ஐந்நூறு மனைவியர்
இருந்தனர் என்றும், குடிமக்கள் ஆடை இன்றியே உலவி வந்தனர் என்றும்,
உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கும் காணப்பட்டதென்றும், சகுனங்களிலும்
சோதிடத்திலும் மக்களுக்கு நம்பிக்கை இருந்து வந்ததென்றும், கோயில்களில்
தேவரடியார்கள் தொண்டு புரிந்து வந்தனர் என்றும் மார்க்கோ போலோ
மேலும் கூறுகின்றான். வாசாப் என்பார் தரும் செய்திகள் மிகவும்
சிறப்பானவை. அவர் கூறுவதாவது: ‘மலைகள் போன்ற மிகப் பெருங்
கப்பல்கள் கடல்மேல் காற்றெனும் சிறகுகளை விரித்து, பாண்டி நாட்டுக்கு
வந்துகொண்டே இருக்கின்றன. இவை சீனம், கான்டன், இந்து, சிந்து ஆகிய
இடங்களிலிருந்து அரிய பண்டங்களை ஏற்றிக் கொண்டு வந்து குவிக்கின்றன;
பாரசீக வளைகுடாவின்மேல் உள்ள தீவுகள் துருக்கி, ஈராக்கு, குராசான்,
ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள், பாண்டி
நாட்டினின்றும் பெற்றவையாம். காலேஸ் தேவருடைய (மாறவர்மன்
குலசேகரன்) ஆட்சியும், நாட்டு வளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக
வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சிக் காலத்தில் அந்நிய நாட்டு மன்னரின்
படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும்
ஒருமுறையேனும் நோய்வாய்ப்பட்டிலன். மதுரை அரசு பண்டாரத்தில்
ஆயிரத்து இருநூறு கோடிப் பொன் சேர்ப்புக் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
அஃதன்றி முத்து, மாணிக்கம்,