நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்குக் குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்குச் சொற்கள் இல...’ பாண்டி மன்னனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சு அப்துர் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லிம் வரலாறுகள் கூறுகின்றன. பாண்டிய உள்நாட்டுப் போர் மாறவர்மன் குலசேகரனுக்கு இரு மக்கள் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மணந்த மனைவிக்குப் பிறந்தவன்; மற்றவன் சடையவர்மன் வீரபாண்டிய மன்னனுடைய வைப்பு மனைவிக்குப் பிறந்தவன். மாறவர்மன் பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனைப் புறக்கணித்து வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான் (கி.பி. 1296). சுந்தர பாண்டியன் இந்த அநீதியைப் பொறானாய் வெகுண்டெழுந்து, தன் தந்தையைக் கொன்று தானே அரியணை ஏறினான் (கி.பி. 1310). கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வாய்ப்பைப் பெற்ற வீரபாண்டியன் சுந்தரபாண்டியன்மேல் போர் தொடுத்தான். சுந்தரபாண்டியன் மதுரையைக் கைவிட்டு ஓடிவிட்டான். அச்சமயம் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் ஒரு பெரும்படையுடன் தெற்கு நோக்கி வந்துகொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அண்டிப் படைத்துணை யளிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். மாலிக்காபூர் எந்தவிதமான உதவியை அவனுக்கு அளித்தான் என்பது தெளிவாகவில்லை; அன்றிச் சுந்தர பாண்டியனை மீண்டும் அரியணை யேற்றி அவனுக்குப் பாதுகாப்பு அணி ஒன்றை நிறுத்திச் சென்றதாகவும் தெரியவில்லை. மாலிக்காபூர் மதுரையைத் தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறிப் பல இடங்களுக்கும் ஓடி ஓடி ஒளிந்து மாலிக்காபூருக்குத் தொல்லை கொடுத்தான். நாடு முழுவதுமே மிகப் பெரியதொரு போர்க்களமாக மாறிவிட்டது. பல இடங்களிலும், பல முனைகளிலும் வீரபாண்டியன் மாலிக்காபூரைக் கடும் போர்களில் கலக்கி வந்தான். கோட்டைக்குள் நுழைந்து ஒளிந்துகொள்ளாமல் பல இடங்களிலும் மாறி மாறித் தோன்றி டில்லிப் படைகளை அலைக்கழித்து வந்தது, வீரபாண்டியனின் போர்க்கலைப் பயிற்சியையும், நுண்ணறிவையும் எடுத்துக்காட்டுகிறது. மாலிக்காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான ‘பீர்தூல்’ என்ற இடத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். வீரபாண்டியனின் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லிம் படைவீரர்கள் |