செல்வாக்கைக் குலைப்பதற்காகவே எச்சம நாயக்கன் என்பவன் பெரும்பேடு சீமைக்குத் தலைவனாக அமர்த்தப்பட்டான். லிங்கமன் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய பாளையங்களின் படைத் துணையை நாடினான். பெரும் படை ஒன்றைத் திரட்டி அதை உத்தரமேரூரின்மேல் ஏவினான்; ஆனால், வெற்றி எச்சமனுக்கே கிடைத்தது. எனினும் லிங்கமன் மனஞ்சளைக்க வில்லை; பணிந்து போகவுமில்லை. வேங்கடன் அவனைத் துரத்திச் சென்று அவனுடைய இருப்பிடமான வேலூரிலேயே அவனை முறியடித்தான். அவன் அஃதுடன் அமையவில்லை. தொடர்ந்து தண்டெடுத்துச் சென்று, காவேரியாற்றைக் கடந்து, மதுரையின்மேல் தன் சினத்தைக் கொட்டினான். மதுரை இராச்சியம் கொலைக்கும், கொள்ளைக்கும், நெருப்புக்கும் இரையாயிற்று. அவன் அடுத்தடுத்துப் பல வெற்றிகள் பெற்றான். கலகக்காரர்கள் அனைவரும் அவனுக்கு அடிபணிந்தனர். லிங்கமன் மட்டும் தன் வேலூர்க் கோட்டையின் படை வலிமையை நம்பி நிமிர்ந்து நின்றான். ஆனால், அக்கோட்டையும் கொத்தளமும் வீழ்ந்தன; அவனுடைய சுதந்தரத்துக்கு அரணிடவில்லை. லிங்கமனின் வீரமும் அழிந்தது. வேங்கடன் கோட்டையைக் கைப்பற்றினான்; அஃதுடன் வேலூரைத் தலைநகரமாகவும் அமைத்துக் கொண்டான். வேங்கடன் 1614-ல் காலமானான். அவனையடுத்து அவன் நியமித்த வண்ணமே அவனுடைய அண்ணன் மகன் இரண்டாம் சீரங்கனே அரியணை ஏறினான். பிரெஞ்சு ஆங்கிலேயர் புகுதல் வேங்கடன் அரசாட்சி புரிந்துவந்த காலத்தில்தான் இந்தியாவின் தலைவிதியை மாற்றிவிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் கீழைக் கடற்கரையில் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் வாணிக நிறுவனங்களைத் தொடங்கினர். முதன் முதல் நைசாம் பட்டணத்திலும், மசூலிப்பட்டினத்திலும் டச்சுக்காரர்கள் தொழிற்சாலைகள் ஏற்படுத்தினார்கள் (1605). அவர்கள் தமிழகத்தில் ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொள்முதல் செய்தார்கள். தெற்கில் பல தொழிற்சாலைகள் தொடங்கத் திட்டமிட்டனர். பிற்காலத்தில் ‘செயின்ட் டேவிட்’ என்று பெயர் ஏற்கவிருந்த ‘தெக்கிண பட்டணத்தில்’ செஞ்சி நாயக்கனிடம் உரிமம் பெற்றுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்கள் (1608). புலிக்காட்டில் ஒரு தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள வேங்கடன் அவர்கட்கு ஏகபோக உரிமை வழங்கினான். சென்னையில் சாந்தோமில் வாணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுகீசியருக்கு |