அஞ்சி டச்சுக்காரர்கள் புலிக்காட்டில் கோட்டை ஒன்றும் கட்டிக்கொண்டார்கள். ஆங்கிலேயர் டச்சுக்காரரிடம் ஓருடன்படிக்கை செய்துகொண்டு புலிக்காட்டில் தமக்கும் ஓர் இடம் பிடித்தார்கள் (1621). ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு புலிக்காட்டைக் கைவிட்டுச் சென்னையை வந்தடைந்தனர் (1639-40). டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் ஒரு தொழிற்சாலையை எழுப்பிக் கொண்டார்கள் (1620). விசயநகரப் பேரரசின் அரசுகட்டில் ஏற உரிமை வழங்கப் பெற்ற சீரங்கன் ஒரு கோழை; பேதை உள்ளம் படைத்தவன்; ஆனால் கொடுங்கோலன். அவனுடைய பேராசை அவனுக்கே கேடு சூழ்ந்தது. வேங்கடனின் அரசிகளில் ஒருத்தி தன் தோழியின் ஆண் மகவு ஒன்றைத் தன் மகவு எனக் கூறிப் புரட்டு அரசு உரிமை ஒன்று வெளியாக்கினாள். அக் குழந்தையையே முடிசூட்டுவிக்க வேண்டும் என்று வற்புறுத்திய கட்சி ஒன்று தோன்றி வலுவடைந்தது. சீரங்கன் பக்கமும் பலர் சூழ்ந்தனர். இரு கட்சியினருக்கும் கொடிய போராட்டம் மூண்டது. எச்சம நாயக்கன் சீரங்கனுக்குத் துணை நின்றான். தொடர்ந்து நடைபெற்ற குழப்பங்களிலும், எச்சமனின் தாமதத்தினாலும் சீரங்கனும் அவனுடைய குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். அரசியின் குழந்தையின் சார்பில் கட்சி கட்டிக் கொண்ட ஜக்கராயன் பேரிலும், அவனுடைய உடந்தையாள்களின் பேரிலும் மக்களுக்கு அளவற்ற வெறுப்பும் சினமும் ஏற்பட்டன. எச்சமன் செய்த முன்னேற்பாட்டினால் சீரங்கனின் இரண்டாம் மகன் இராமராயன் வண்ணான் ஒருவனின் துணை கொண்டு சிறையினின்றும் உயிர் தப்பினான். அவனையே எச்சம நாயக்கன் விசயநகரப் பேரரசனாக முடிசூட்டினான். ஜக்கராயன் போரில் தோற்றுக் காட்டுக்கு ஓடி ஒளிந்தான். எனினும், அவன் விடாமுயற்சியில் தளராதவனாய் மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வந்து மதுரை முத்துவீரப்ப நாயக்கன், செஞ்சிகிருஷ்ணப்ப நாயக்கன் ஆகியவர்களுடைய படைத்துணை நாடிப்பெற்றான். பேரரசன் இராமராயன் சார்பில் தஞ்சாவூர் இரகுநாத நாயக்கனின் துணையை எச்சமன் அடைந்தான். காவிரியின் பெரிய அணைக்கட்டுக்கண்மையில் தோப்பூர் என்னும் இடத்தில் எச்சமனுக்கும் ஜக்கராயனுக்குமிடையே கடும் போர் ஒன்று நிகந்தது.ஜக்கராயன் தோல்வியடைந்து உயிர் துறந்தான். வேங்கடனின் பொய்மகன் சிறைபிடிக்கப்பட்டான். கிருஷ்ணப்ப நாயக்கன் தன் நாட்டை இழந்தானாயினும் செஞ்சிக் கோட்டையை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டான். இழந்த நாட்டை மீட்டுக்கொள்ளும் |