பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 429

கார்த்திகை மாதங்களிலும் அவனுக்கு அவனுடைய குடிமக்களான வலையர்கள்
ஒவ்வொரு கண்ணி முயல்கள் கொடுத்து வரவேண்டுமென்றும், பறையரும்
பள்ளரும் இருகோழிகள் கொடுத்து வரவேண்டுமென்றும், அவனுக்குப்
பாவாடை, செம்மயிர், அடக்கம், நாடகசாலை, பகல் விளக்கு, ஏறச் சங்கு,
இறங்கச் சங்கு, அங்கக் களரி, புளித்தண்டை, செண்பகராமன் வாழ்வு ஆகிய
விருதுகளைக் கொடுத்து வரவேண்டுமென்றும் குடிமக்கள்
ஒப்புக்கொண்டார்கள். இந்த விருதுகளில் பல இன்னவென விளங்கவில்லை.

     மற்றொரு கிராமத்தில் வேறு ஒரு விசித்திரமான ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.46 ஊரில் ஏதேனும் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்தால்,
ஈமச்சடங்குகள் செய்வதற்கு அவ்வீட்டில் பெண்கள் இலராயின் ‘வலைச்சி
முக்காடு இட்டுச் சவத்துக்கு முன்னே மயானத்துக்குக் கூட்டிச் சவம்
அடுக்கினால், மற்றாம் நாள் தண்ணீர் சொரிஞ்சு காடு ஆற்றுகிறதும், இரண்டு
தொழிலும்...’ வலையர்கள் செய்து வரவேண்டியவராக இருந்தனர். ‘கூலிக்கு
மாரடிப்பது’ என்னும் வழக்கம் அக்காலத்திலும் இருந்தது வியப்பேயாகும்.

     குற்ற விசாரணையின்போது பழுக்கக் காய்ச்சிய கொழு ஒன்றை
உருவச்செய்து குற்றம் கண்டுபிடிக்கும் முறையை மக்கள் கையாண்டு
வந்ததுண்டு.47

     தமிழகத்தில் காணப்பட்ட பல பழக்கவழக்கங்களைப் பற்றியும், குல
ஒழுகலாறுகளைப் பற்றியும், பெண்மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும்
கிறித்தவப் பாதிரிகள் பலர் எழுதி வைத்துள்ளனர். இந்து சமயத்தைப்
பழிக்கவேண்டுவதும், மக்களின் பழக்கவழக்கங்களை எள்ளி நகையாட
வேண்டுவதும், கிறித்தவ சமயத்தை உயர்த்திக் கூற வேண்டுவதும்
அப்பாதிரிகளின் சீரிய நோக்கமாகும். எனவே, அவர்கள் தம்முடைய
நூல்களில் பல மிகைபாடுகளையும், பொய்ச் செய்திகளையும், திரிபுகளையும்
சேர்த்துள்ளனர். அவற்றைப் புறக்கணித்து, அவர்களுடைய நூல்களில்
மெய்ப்பொருள் காண வேண்டியது வரலாற்று ஆய்வாளரின் கடமையாகும்.

     தாம் நேரில் கண்டவற்றையும், கேட்டவற்றையும், படித்து
அறிந்தவற்றையும், கற்பனை செய்துகொண்டவற்றையும்

     46. I. P. S. No. 601.
     47. I. P. S. No. 601.