நூல். இதில் காணும் சொல்லாட்சியும், பொருட்செறிவும், மெய்ப்பாடுகளும், இசையமைப்பும் ஈடிணையற்றவை எனப் பாராட்டப்படுகின்றன. திரிகூடராசப்பக் கவிராயரின் கற்பனைத்திறமும், சொல்வளமும், இயற்கை யழகுகளைச் சொல்லோவியமாகத் தீட்டும் அமைப்பும் இவருடைய ஆழ்ந்து அகன்ற நுண்ணிய புலமையை எடுத்துக்காட்டுகின்றன. ரவிக்கை, சேலை, சலவை (புடைவை), சல்லி, சதிர் ஏறுவேன், கப்பல், சீனச்சரக்கு, துக்குணி (சிறிதளவு) என்னும் சொற்களை முதன் முதல் குற்றாலக் குறவஞ்சியில்தான் காண்கின்றோம். குறத்திகள் ஊர் ஊராகச் சென்று பெண்மக்களுக்குக் குறி சொல்லிப் பிழைக்கும் வழக்கமானது பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் தோன்றிவிட்டதென இந் நூலினால் அறிகின்றோம். இன்றும் கிராமப் புறங்களில் குறி சொல்லும் குறத்திகளும், பச்சை குத்தும் குறத்திகளும் அவ்வப்போது தோன்றி வருவதுண்டு. போகுது, வருகுது, போச்சுது, இருக்குது என்னும் கொச்சைச் சொற்களும் இந் நூலில் இடம் பெறுகின்றன. பிற்காலத்தில் எழுந்த கீர்த்தனைகளிலும், பாரதியாரின் பாட்டுகளிலும் இத்தகைய சொல்லாட்சி மலிந்து கிடப்பதைக் காணலாம். முக்கூடற்பள்ளு என்னும் இனிமையான ஒரு நாடக நூலை வேலன் சின்னத்தம்பி என்ற என்னயினாப்புலவர் என்பார் படைத்தளித்தார். ஒன்பான் வகை இலக்கியச் சுவைகளும் இந் நூலில் ததும்புகின்றன. எளிய நடை, இனிக்கும் சொற்கள், ஈர்க்கும் இசை, சொல்லோவியக் காட்சிகள் ஆகியவை இந் நூலின் சிறப்புகள். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சியில் கிறித்தவப் பாதிரிகளும் ஈடுபடலானார்கள். அவர்களுள் சிறந்தவர் பெஸ்கி பாதிரியார். வீரமாமுனிவர் என்னும் தமிழ்ப் பெயரில் இவர் தமிழ்மொழி வரலாற்றில் உயர்ந்ததோர் இடம் பெற்றுள்ளார். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கே புதிய திருப்பங்களை அமைத்துக் கொடுத்த பெருமையுடையவர் இப் பாதிரியார். அவ் வகையில் தொல்காப்பியனார், பவணந்தி முனிவர் ஆகியவர்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். வீரமாமுனிவர் தமிழில் புதிய முறையில் இலக்கியங்கள் படைத்தார். சில தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தையும் சீரமைத்தார். வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தார் (1680). இளமையிலேயே துறவு பூண்டு கிறித்தவ சமயப் பணிக்காகத் தமிழகத்தை |