அடைந்தார். தமிழின் சீரும் சிறப்பும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன ; தமிழ் வளர்ச்சிக்குத் தாமும் தொண்டு புரியலானார். அவர் தம் தொண்டுகளைத் தொடங்கிய சமயத்தில் தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்புகளும், கொலையும், கொள்ளையும் மலிந்து கிடந்தன. பாளையக்காரர்களும், முஸ்லிம் நவாபுகளும், படைகளும் மக்கள் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கி விட்டிருந்தன. மராத்தியக் குதிரைக்காரர்கள் ஆங்காங்குத் திடீர்திடீரெனத் தோன்றி மக்களைப் படுகொலை செய்தும், சொத்துகளைச் சூறையாடியும் சென்றனர். அடுத்த நாழிகை என்ன நேருமோ என்று மக்கள் அவலப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் அயல்நாட்டினர் ஒருவர் தமிழகத்துக்கு வந்து, அமைதியான துறவு வாழ்க்கையில் தோய்ந்திருந்து தமிழ்ப்பணி ஆற்றினார் என்பது வியப்பூட்டும் நிகழ்ச்சியாகும். வீரமாமுனிவர் இத்தாலிய மொழி, கிரேக்கம், எபிரேயம் (Hebrew), இலத்தீன், பிரெஞ்சு மொழி, பார்சிமொழி, இந்துஸ்தானி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். அவர் தமிழருடன் கலந்து உறவாடி அவர்களைப்போலவே வாழ்ந்திருந்து அவர்களுடைய இணக்கத்தையும் அன்பையும் கவர்ந்தார். தம்மை நாடிவரும் ஏற்றவரையும் ஏதிலாரையும் ஒருங்கே வரவேற்றுத் தம் அன்பையும், ஆதரவையும் சொரியும் தமிழ் மக்கள், வீரமாமுனிவருக்குத் தமிழில் ஏற்றங்கொடுத்து அண்மையில் அவருக்கு ஒரு சிலையையும் நாட்டியுள்ளனர். வீரமாமுனிவர் இயற்றிய ‘தேம்பாவணி’ என்னும் காப்பியம் தமிழில் இன்றும் ஒரு தேம்பாவணியாகவே விளங்கி வருகின்றது. அதில் வீரமாமுனிவர் புறநானூறு, குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் கருத்துகளைச் சிறிதேனும் தயங்காமல் எடுத்தாண்டுள்ளார். அவர் சில இலக்கண நூல்களையும் இயற்றியுள்ளார். சதுரகராதி என்னும் அகராதி ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார். தமிழில் முதன்முதல் செம்மையான, இனிமையான, எளிய உரைநடை ஒன்றை உருவாக்கியவர் வீரமாமுனிவரே யாவார். பழங்காலத்திலும் உரைநடை கையாளப்பட்டு வந்துள்ளது. ஆனால், அஃதும் செய்யுளைப்போலவே மோனையையும் அடுக்கு மொழிகளையும் கொண்டிருந்தது. வைணவர்கள் ‘ஈடு’ என்னும் வியாக்கியானங்களில் கையாண்டது மணிப் பிரவாள நடையாகும். எனவே, தெளிவான, எளிய தமிழ்ச் சொற்களைத் தொடராக்கி, ஐரோப்பிய முறையில் உரைநடை வகுத்தவர் வீரமாமுனிவர். இவர் ஆக்கிய பரமார்த்த குரு கதையானது தமிழ்மொழியில் குழந்தை இலக்கியத்தில் இறவாத இடம் |