பெற்றுவிட்டது. இந்நூல் இளந் தமிழால் இயன்றது. குழந்தைகளின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தைக் கொள்ளைகொண்டு அவர்களை நகைக்க வைப்பதற்காகவே எழுந்த இலக்கியம் இது. பல தமிழ்ப் புராணங்களும், தோத்திரப் பிரபந்தங்களும், வேதாந்த சாத்திரங்களுக்கு விளக்க உரைகளும் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்தன. நிலையற்ற அரசியல் சூழ்நிலையில் அஞ்சி அஞ்சி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில் வாழ்க்கைச் சூழலில் சிக்குண்டு இன்பதுன்பங்களில் தோய்வுறாமல் உளநிறைவுடன் சைவத் துறவியார் ஒருவர் திருவாவடுதுறையில் அமர்ந்து பல அரிய தமிழ் நூல்களை இயற்றினார். அவர்தாம் சிவஞான முனிவர் ; மெய்கண்டாரின் சிவஞான போதத்துக்குச் சிற்றுரையும் பேருரையும் கண்டவர்; சிவஞான சித்தியாருக்குப் பொழிப்புரை ஒன்றும் எழுதியுள்ளார் ; இலக்கியம், இலக்கணம், சைவசமயம், தத்துவம், தருக்கம் ஆகிய துறைகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இவர் தருக்க வேந்தராகவும், பன்மொழிப் புலவராகவும், பசுந்தமிழ்ப் பாவாணராகவும், பல்கலைக் களஞ்சியமாகவும் விளங்கினார். இவருடைய பன்னிரண்டு மாணவர்கள் ஒப்பற்ற புலவர் பரம்பரை ஒன்றை உருவாக்கினர். சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிபுராணம் கற்பனை வளமும், சொல்லழகும், இறை மணமும் கலந்து விரவியுள்ள ஒரு நூலாகும். காஞ்சிபுராணத்தின் முற்பகுதியை இவர் பாடினார் ; இவருடைய மாணவரான கச்சியப்ப முனிவர் பிற்பகுதியைப் பாடி அதை முடித்தார். சிவஞானமுனிவர் பாடிய அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பயில்தொறும் புதுப்புதுச் சுவைகளை நல்கக்கூடியது. அதனில் அம்புலிப் பருவப் பாடல்கள் புலவர்களுக்கு இலக்கிய இன்ப ஊற்றெனத் தகும். கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரின் தலையாய மாணவர். இவர் தணிகைப் புராணம் ஒன்று எழுதியுள்ளார். சைவ சித்தாந்தக் கருத்துகள், அகப்பொருள் துறைகள், அணி வகைகள், பல்வேறு இலக்கண மரபுகள் ஆகியவற்றைக் கச்சியப்ப முனிவர் தம் நூலில் வைத்து இழைத்துள்ளார். புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் ஏற்றங்கண்டிருந்த காலத்தில் பிரெஞ்சுக் கவர்னர் டூப்ளே என்பவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர். இவர் 1709-ல் பிறந்தார். இவருடைய பரந்த அனுபவத்தையும், நுண்ணறிவையும், நேர்மையையும் கண்டறிந்த பிரெஞ்சுக்காரர்கள் இவரைத் தம் |