திவானாக அமர்த்திக் கொண்டனர். இவருடைய தாய்மொழி தமிழ். எனினும் தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சுமொழி, போர்ச்சுகீசியமொழி ஆகியவற்றையும் நன்கு பயின்றிருந்தார். வானவியலிலும் சோதிடத்திலும் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு நல்ல புலமையுண்டு. தமிழ்ப் புலவர்களின் புரவலராகவும் திகழ்ந்தார். அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகம் என்னும் சிறந்த நூலானது ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்பு அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக் கூறுவர். இவர் தம் கைப்பட நாட்குறிப்பு ஒன்று தமிழில் எழுதி வைத்து வந்தார். அவருடைய காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணியாக விளங்குகின்றது இந் நாட்குறிப்பு. இஃது ஒரு பெரும் வரலாற்றுக் கருவூலமாகவும் திகழ்கின்றது. ஆனந்தரங்கம்பிள்ளை, ‘தாம் காதால் கேட்டவற்றையும், கண்ணால் பார்த்தவற்றையும், கப்பல்கள் வருவதையும், கப்பல்கள் போவதையும், ஆச்சரியங்களும் புதுமைகளும் நிகழ்ந்தால் அவற்றையும் இத் தினசரியில் குறிக்கின்றேன்’ என்று கூறி, இந் நாட்குறிப்பைத் தொடங்குகின்றார். அவர் நாளைய பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந் நாட்குறிப்புகளில் படித்தறியலாம். ஆனந்தரங்கம் பிள்ளை கையாண்ட எழுத்து நடையே ஒரு புதுமையானதாகும். அவருடைய நாட்குறிப்புகளில் உயிர்த் துடிப்பும், உணர்ச்சி வெள்ளப் பெருக்கும், எழுச்சியும், ஏக்கமும், சினமும், துள்ளலும், உவகையும் பொங்கி வழிவதைக் காணலாம். இவருக்குப் பிறகு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் இத்தகைய நாட்குறிப்பு ஒன்றை எழுதி வையாதது ஒரு குறைபாடாகும். தமிழகத்தில் அவ்வப்போது வடமொழியிலும், தெலுங்கிலும் இயல் இசை நாடகங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன. திருவையாற்றில் அமர்ந்திருந்து தியாகராச சுவாமிகள் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் பாடினார். இவர் கையாண்டுள்ள தெலுங்கு மொழியில் மென்மையும், இனிமையும், உருக்கமும் கொண்ட சொற்களைக் காணலாம். பாடல்கள் உள்ளத்தை இளக்கக்கூடியவை. இக்காலத்துத் தெலுங்கில் காணப்படும் வடமொழிக் கலப்பு ஆரவாரத்தைத் தியாகையரின் பாடல்களில் காணமுடியாது. சுவாமிகளின் பாடல்களை நிறுத்தி, மென்குரலில் குதிப்பும் துள்ளலும் இன்றி, இசை மருட்டலும் இன்றிப் பொருள் உணர்ந்து பாடும்போது தமிழரும் கேட்டு இன்புறக்கூடும். அவ்வளவு எளிய சிறுசிறு சொற்களால் இவருடைய கீர்த்தனைகள் அமைந்துள்ளன. இசைப் புலவர்கள் தாந்தாம் கற்ற கலையுணர்வையும், கலையுயர்வையும் |