பக்கம் எண் :

448தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

காட்டும் பொருட்டுச் சுவாமிகளின் கீர்த்தனைகளைப் பொருள்
தேற்றமின்றியும், சொற்களைச் சிதைத்தும், மென்று விழுங்கியும்,
உணர்ச்சியின்றியும், பிறர்க்குப் பொருள் விளங்காவாறும் மேடைகளில் பாடி
வருகின்றனர். இறைவன் உள்ளத்தை உருக்கித் தமக்குத் திருவருளைத்
தேடிக்கொள்ளுமாறு தியாகராச சுவாமிகள் பாடிய பாடல்கள் இசைவாணரின்
புலமைச் சிலம்பத்துக்குப் பயன்பட்டு வருவது வருந்தத்தக்கதாகும்.
சுவாமிகளின் கீர்த்தனைகள் பல அபூர்வ இராகங்களில் செய்யப்பட்டுள்ளன.

     பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் சோதிடம், மருத்துவம் ஆகிய துறைகளில் சித்தர்கள் பேரால்
பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் காணப்படும்
சொல்லாட்சிகளானவை அவற்றுக்குப் பழைமையை மறுக்கின்றன. எனினும்
அந்நூல்களில் யாக்கப்பட்டுள்ள செய்யுள்கள் அமைப்பிலும், போக்கிலும்
விறுவிறுப்பாக ஓடும் நடையில் காணப்படுகின்றன. மருத்துவ நூல்களும், வாத
நூல்களும் காயகற்ப மருந்துகளைப் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன.
மருத்துவத்தில் சித்தர் முறை என்பது தமிழகத்திலேயே தோன்றி வளர்ந்த
ஒரு கலையாகும். இம் முறையில் மூலிகைகள், தாதுப்பொருள்கள்,
உயிரினங்கள் ஆகியவை பயன்படுகின்றன. நூற்றெட்டு உபரசங்கள், அறுபத்து
நான்கு பாடாணங்கள், இருபத்தைந்து உப்பினங்கள் ஆகியவை சித்தர்கள்
கையாண்ட கைம்முறையில் சேர்கின்றன.

     உலகம் பலவாகத் தோற்றினாலும், அடிப்படையில் அது ஒரே தன்மை
வாய்ந்த ஆதி சடப்பொருள் ஒன்றால் ஆனது என்றும், இவ்வடிப்படைத்
தன்மையை மாற்றக் கூடுமானால் பல்வேறு பொருள்களின் இயல்பையே
மாற்றிவிடலாம் என்றும், இந்த முறையைக் கையாண்டு பாதரசத்தையும்,
உப்பையும், கட்டிச் செம்பையும், வெள்ளியையும் உயர் மாற்றுத் தங்கமாக
மாற்றலாம் என்றும் சித்தர் வாத நூல்களும், மருத்துவ நூல்களும் கூறுகின்றன.
இக் கொள்கையானது ஐரோப்பிய நாடுகளிலும் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே அறிஞர் கருத்தைக் கவர்ந்து வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
பண்டைய சீனத்திலும், எகிப்திலும் செயற்கைப் பொன் செய்யும் முயற்சிகளும்,
காயகற்ப மருந்து வைப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தன ;
பண்டைய அராபியர்களும் பொன் செய்யும் கலையில் பேரூக்கம் காட்டி
வந்தனர். இரசவாதக் கலையில்