பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 449

ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அறிஞருள் பார்சல்சஸ் (1493-1541) என்ற
மருத்துவர் மிகவும் சிறந்தவராகக் கொள்ளப்பட்டுள்ளார். அவருடைய
முறைகளுக்கும் தமிழகத்துச் சித்தர் முறைகளுக்கும் மிகவும் நெருங்கிய
தொடர்பு காணப்படுகின்றது. பூநீறு, வழலை, வீரம், பூரம், இலிங்கம்,
மனோசிலை, கெந்தகம், ஈயம், துத்தநாகம், பாதரசம், செம்பு, தங்கம்
போன்றவை சித்த மருத்துவ முறைகளில் கையாளப்படுகின்றன. குரு, முப்பூ,
மெழுகு, சூரணம், பற்பம், செந்தூரம் ஆகியன சித்தர் முறை மருந்து
வகைகளில் சிலவாம். வாயில் அடக்கிக் கொண்டு வானத்தில் கடுவேகத்தில்
பறந்து செல்லக்கூடிய கவனக் குளிகைகளும் சித்தர் நூல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளன. திருக்குற்றாலத்தில் ‘கவன சித்தர் வந்து வந்து
காயசித்தி விளைப்பர்’ என்று குற்றாலக் குறவஞ்சியில் அதன் ஆசிரியர்
கூறுகின்றார்.

     சோதிட நூல்களில் நாடிகள் என்னும் பெயருடைய நூல்கள் பல
தமிழகத்தில் காணப்படுகின்றன. அவற்றுள் கௌசிக நாடி, கௌமார நாடி,
சுக்கிர நாடி, காகபுசுண்டர் நாடி, துருவ நாடி, சப்தரிஷி நாடி, நந்தி நாடி,
மார்க்கண்ட நாடி என்பன சில. சோதிடத்துறையில் எழுதப்பட்டுள்ள ஏனைய
நூல்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று நாடிகளிடம் காணப்படுகின்றது.
ஒருவருடைய கைரேகைகளைக் கொண்டோ, அவருடைய சாதகக் குறிப்பைக்
கொண்டோ அவருடைய வாழ்க்கையின் முக்கால நிகழ்ச்சிகளையும் நாடிகள்
எடுத்துக் கூறுகின்றன. சாதகனின் பெயர், பெற்றோரின் பெயர், பிறந்த ஊர்,
அவர் பெற்ற கல்வி, செய்யும் தொழில் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளை,
நாடிகள் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் மறைபொருளாகவும்
தெரிவிக்கின்றன. சோதிடர்கள் பொதுவாக, நவாமிசம் (ஓரிராசியில் ஒன்பதில்
ஒரு பகுதி, 30/9பாகை) வரையில் கணித்துப் பலன் கூறுவார்கள். ஆனால்,
நாடிகளில் திரிம்சாமிசம் (1/30 0, அதாவது ஒருபாகை) அல்லது சோடசாமிசம்
(1/600, அதாவது அரைப் பாகை) வரையில் மிகவும் நுட்பமாகக்
கணிக்கப்பட்டுப் பலன்கள் தரப்படுகின்றன. நம் வியப்பையும் ஆவலையும்
ஒருங்கே தூண்டும் இந் நாடி சோதிடக்கலை இன்று தமிழ்நாட்டில் ஒரு சிலர்
கையில் மீட்பின்றி மாண்டு வருகின்றது.

     தமிழரின் வாழ்வில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரின் வாழ்க்கையும்
பின்னிப் பிணைந்துள்ளது. அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் துபாஷாக
(மொழிபெயர்ப்பாளராக) அமர்ந்து பணியாற்றியவர். தாம் ஈட்டிய பொருளைக்