கொண்டு தமிழகம் முழுவதிலும் அறக்கட்டளைகள் நிறுவினார் ; கோயில் திருப்பணிகள் செய்தார். சென்னையிலும், காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய ஊர்களிலும் பச்சையப்ப முதலியாரின் அறக்கட்டளையால் நிருவகிக்கப்பட்டு வரும் கல்லூரிகளும், உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளும் தமிழகர்கள் அறியாதவையல்ல. ஒரு நூற்றாண்டாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியானது ஏழை மாணவரின் புகலிடமாகச் செயல்பட்டு வந்துள்ளது. பச்சையப்ப முதலியாரின் உடன்காலத்தவரான மணலி சின்னைய முதலியார் என்பாரும் பல அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். நந்தவனங்கள் அமைத்தார் ; சிதம்பரம் சிற்சபையின் பஞ்சாட்சரப் படிக்கு வெள்ளி வேய்ந்தார். அவருடைய அறக்கட்டளைகள் ஒன்று சில மாறுதல்களுக்கு உட்பட்டு இப்போது சென்னையில் ‘மணலி மாணவர் விடுதி’ என்னும் பெயரில் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உணவும் உறையுளும் வழங்கி வருகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் கிறித்தவ இஸ்லாம் சமயங்கள் ஏற்றங்கண்டதாலும், இந்து மன்னர்கள் ஆற்றலிழந்து அயல் சமயத்தினரின் படைத் துணையையே நாடி ஓடியதாலும், இந்துக் கோயில்கள் பாதுகாப்பற்று, பேணுவாரற்றுக் கிடந்தன. அக் காரணத்தால் தமிழகத்துப் பெருங்கோயில்கள் பல போர் அணிகள் நிறுத்தப்பட்டிருந்த பாடி வீடுகளாகவும் கொத்தளங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. மக்கள் எத்துணை அவல நிலையை எய்தியிருக்க வேண்டும், எவ்வளவு செயலற்று, கையற்று வணங்கி வாழ்ந்து வந்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியுள்ளது. சிதம்பரம் கோயிலில் சாஹு ஜி என்ற மராத்தியன் பகைவருக்கு அஞ்சித் தன் படையுடன் அடைக்கலம் புகுந்தான். பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும், ஐதரலியும் மாறி மாறி இக் கோயிலைத் தம் கொத்தளங்களாகப் பயன்படுத்தி வந்தனர். இக் கோயில் முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து இராணுவத்தினர் வசம் இருந்து வந்தது. பீரங்கித் தாக்குதல்களால் இக் கோயிலின் மண்டபங்களும், சுற்றாலைகளும், சிறு கோயில்களும் இடியுண்டு அழிந்தன. ஒரு முறை நடராசர், சிவகாம சுந்தரி திருவுருவச் சிலைகளை எடுத்துச் சென்று திருவாரூர்க்கோயில் சபாபதி மண்டபத்தில் வைத்திருந்து, சிதம்பரம் கோயில் இராணுவத்திடமிருந்து விடுதலையான பிறகு மீண்டும் அங்குக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சிதம்பரம் கோயிலைப் போலவே திருவண்ணாமலைக் கோயிலிலும் படைவீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பல படுகொலைகளும் |