பின்தயங்கினரல்லர். ஒழுக்கம் அவர்களிடம் இழுக்குற்றது. கண்ணனூரிலும் கோவாவிலும் போர்ச்சுகீசியர் இந்துக் குடி மக்களைத் துண்டு துண்டாய் வெட்டியும், உயிருடன் அவர்களுடைய உறுப்புகளை அறுத்துப் படுகொலைகள் செய்தும் நெஞ்சைப் பிளக்கக்கூடிய கொடுமைகள் இழைத்தனர். மதுரையில் வீரப்பநாயக்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஜெசூட் பர்னாண்டஸ் பாதிரியின் (Father Fernandez) தலைமையில் ஜெசூட் பாதிரிகள் கிறித்தவ மிஷன் (இயேசு கிறித்தவக் குழு) ஒன்றைத் தொடங்கினார்கள் (1592). கிருஷ்ணப்ப நாயக்கனும் அவர்கட்கு அனுமதி வழங்கியிருந்தான். உயர்வகுப்புக் குடிமக்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதே இந்த மிஷனின் சீரிய நோக்கமாகும். அவர்கள் மாதாகோயில் ஒன்றையும் எழுப்பினர். பர்னாண்டஸ் பாதிரியார் பதினான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்தும் வெற்றிகண்டிலர். போர்ச்சுகீசியரைத் தமிழர்கள் பறங்கிகள் என்று இழித்துக் கூறினர். போர்ச்சுகீசியர் மாட்டு இறைச்சியைத் தின்றதையும், மதுபானம் குடித்ததையும், புலையரோடு கலந்து உறவாடியதையும் தமிழர் வெறுத்தனர். போர்ச்சுகீசியரின் நெஞ்சுரமும், படைப்பலமும், செல்வச் செருக்கும் தமிழரின் உள்ளத்தை அசைக்க முடியவில்லை. ஆகவே, மதுரை மிஷனின் தொடக்க முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன. எனினும் ராபர்ட்- -நொபிலி பாதிரியார் மதுரைக்கு வந்து பணியேற்ற பிறகு மதுரை மிஷனின் சரித்திரமே மாறி விட்டது. ஆதியில் அப் பாதிரியின் முயற்சிகளுக்குப் பல இன்னல்களும், இடும்பைகளும் ஏற்பட்டன. மதுரை நாயக்கர்களின் படைகளுடன் கிறித்தவப் பாதிரிகளும் கலந்து அணிவகுத்துச் செல்ல வேண்டியர்களாக இருந்தனர். ஆனால், அஃதும் ஒரு நற்பனையே விளைவித்தது. சேனைகள் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் நொபிலி பாதிரியார் தாமும் உடன் சென்று ஆங்காங்குத் தம் சமயப் பணிகளைச் செய்து வந்தார். சத்தியமங்கலத்தில் 1643-ல் கிறித்தவப் பிரசாரத்துக்காகப் பாதிரி டி-காங்டாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. செஞ்சியை யடுத்திருந்த பாளையக்காரன் ஒருவன் கிறித்தவப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தன் இசைவைத் தெரிவித்தான். இராமநாதபுரத்துக் கிறித்தவப் பாதிரிகளுக்கும் சூழ்நிலை ஏற்றபடியே அமைந்திருந்தது. நாளடைவில் மதுரை மிஷனானது மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய ஊர்களின் எல்லைகளைக் கடந்து மேலும் பரவிச்சென்று வேலூர், கோல்கொண்டா தேசங்களிலும் பரவலாயிற்று. பல சமயங்களில் மராத்தியரின் தாக்குதல்களாலும் மிஷன் தொண்டுகளுக்குத் தடை ஏற்பட்டதுண்டு. |