வருவது இக் கம்பெனியின் சிறப்பான நோக்கமாக இருந்தது. ஆனால், இந்த வாணிகத்தில் அவர்கள் இலாபங் காணவில்லை. எனவே, டேனியர்கள் தரங்கம்பாடியையும், வடக்கில் இருந்த சேராம்பூரையும் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ரூ.12,50,000-க்கு விற்றுவிட்டார்கள். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி 1664-ல் முதன் முதல் தோற்றுவிக்கப்பட்டது. சூரத்திலும் (1668), மசூலிப்பட்டினத்திலும் (1669) இக் கம்பெனியின் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஏனைய ஐரோப்பியருடன் பிரெஞ்சுக்காரரும் அரசியல் வட்டாட்டத்தில் இறங்கினர். நாட்டின் அவலநிலைமையை அறிந்து எரியும் வீட்டில் கொள்ளியைப் பிடுங்கினவரை இலாபம் என்னும் கொள்கையை மேற்கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் ஆங்காங்கு இடம் தேடிப் பிடித்து வந்தனர். சாந்தோமை 1672-ல் முற்றுகையிட்டுக் கைப்பற்றி மீண்டும் அதை 1674-ல் இழந்துவிட்டார்கள். பீஜப்பூர்ச் சுல்தான்கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோடி என்பவன் பெரம்பலூருக்கு அண்மையில் வலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தான். அவனிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரன் தானமாகப் பெற்றான். பிரெஞ்சுக்காரரின் வாணிக நிறுவனம் அங்கு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நூறாண்டுகளுக்குமேல் புதுச்சேரியானது தமிழகத்து வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்கு விளைகளனாக இருந்து வந்துள்ளது. சிவாஜியின் படையெடுப்பு ஒன்றினால் (1677) புதுச்சேரியானது பல அல்லல்களுக் குள்ளாயிற்று. எனினும் மார்ட்டினின் விடாமுயற்சியினால் பிரெஞ்சு வாணிகம் மேலும் மேலும் வளர்ந்துவந்தது. புதுச்சேரி 1693-ல் டச்சுக்காரர்களின் கைக்குள் விழுந்தது. எனினும் பிரெஞ்சுக்காரர்கள் மீண்டும் அதை டச்சுக்காரரிடமிருந்து கைப்பற்றிக்கொண்டனர். மார்ட்டின் புதுச்சேரியில் கோட்டை எழுப்பியும், கொத்தளங்கள் அமைத்தும் அதை வளமுள்ள நகரமாக மாற்றினான். அவன் காலத்தில் புதுச்சேரியின் மக்கள் தொகை நாற்பதினாயிரத்தைக் கடந்து நின்றது. புதுச்சேரி வளர்ச்சிபெற்று வருவதைக் கண்ட மார்ட்டின் சூரத்து, மசூலிப்பட்டினம் ஆகிய ஊர்களின் தொழிற்சாலைகளுக்கு முடிவு கட்டினான். பிரெஞ்சு நாட்டுக்காக முப்பத்தெட்டாண்டுகள் அயராமல் உழைத்துவந்த மார்ட்டின் 1706-ல் காலமானான். கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிலாந்தின் குடிமக்கள் அனைவருமே இந்தியாவுடன் வாணிகம் செய்யும் உரிமையுடையவர்களாவர் என்று |