பக்கம் எண் :

458தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இங்கிலாந்தின் பராளுமன்றம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றிற்று (கி.பி. 1694).
இத் தீர்மானத்தின் அடிப்படையில் வேறு கம்பெனிகளும் நிறுவப்பட்டன.
அவற்றுக்குள் போட்டியும் பொச்சரிப்பும் பெருகிவந்தமையால், நிறுவப்பெற்ற
கம்பெனிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே கம்பெனியாக உருவாயின
(கி.பி. 1708-9). அப் புதிய கம்பெனியானது பல இடுக்கண்கள்,
இன்னல்களினிடையே பெரிதும் முனைந்து இந்திய மண்ணில் தன் நிலையான
வாழ்வுக்கு உறுதியான அடிப்படைகள் அமைத்துக்கொள்ளலாயிற்று. அது
மொகலாயப் பேரரசினிட மிருந்து பல உரிமைகளையும், வாணிகச்
செல்வாக்குகளையும் கேட்டுப் பெற்றது. கல்கத்தாவிலும், ஐதராபாத்திலும்,
சூரத்திலும், சென்னையிலும் விரிவான நில உரிமைகள் இதற்கு
வழங்கப்பெற்றன. மொகலாயப் பேரரசு முழுவதிலும் பம்பாயில் அச்சிட்ட
கம்பெனி நாணங்கள் செல்லுபடியாயின. மராத்தியருக்கும் போர்ச்சுகீசியருக்கும்
இடையே ஏற்பட்ட போர்களினால் கம்பெனி வாணிகம் குன்றிவரத்
தொடங்கிற்று. அதனால் தன் தற்பாதுகாப்புக்காகக் கம்பெனியானது
இங்கிலாந்திலிருந்து ஏராளமான படைகளையும் போர்க்கருவிகளையும்
இறக்குமதி செய்துகொண்டது. தனக்குண்டான படைப்பலத்தைப்
பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது கட்சி கூடி உள்நாட்டுப் போர்களில்
தலையிட்டுக்கொண்டு தன் போர்த் திறனையும் பொருள் பலத்தையும்
வெளிப்படுத்திப் பயன்பெறுவதும் நாடு பிடிப்பதும் கம்பெனிக்கு அரிய
செயலாகத் தோன்றவில்லை.

     சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியும், அதைச் சார்ந்துள்ள நிலப்
பகுதியும் இந்திய வரலாற்றில் கருநாடகம் என்னும் பெயரால் வழங்கி
வருகின்றன. இது ஐரோப்பியர் கொடுத்த பெயராகும். பதினெட்டாம்
நூற்றாண்டு தொடங்கிச் சில ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கும்
பிரெஞ்சுக்காரருக்குமிடையே நாடு பிடிக்கும் போட்டியானது ஓங்கி வளர்ந்து
பல போர்கள் விளைவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கிற்று. சிறிது
காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் சூரத், மசூலிப்பட்டினம் போன்ற துறைமுகப்
பட்டினங்களில் அமைக்கப்பட்டிருந்த தம் தொழிற்சாலைகளைக் கைவிட
வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அவர்களுடைய வாணிகம் சுருங்கவே
அரசியல் செல்வாக்கம் குன்றிவரலாயிற்று. தாம் வாணிகம் செய்து பொருள்
திரட்ட வேண்டுமென்றுதான் பிரெஞ்சுக்காரர்கள் ஆதியில் திட்ட
மிட்டிருந்தனர். அவர்கள் திரட்டிக்கொண்ட படைப்பலமும் அவர்களுடைய
வாணிகத்தின் பாதுகாப்புக்காகவே பயன்