பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 459

படுத்தப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் 1725-ல் கேரளக் கடற்கரையில்
அமைந்துள்ள மாஹியையும், 1739-ல் காரைக்காலையும் கைப்பற்றினார்கள்.
புதுச்சேரிக்கு டூப்ளே என்பான். 1742-ல் கவர்னராகப் பொறுப்பேற்றான்.
அதன் பின்பு பிரெஞ்சுக்காரரின் நோக்கமும் கொள்கையும் மாற்றம் பெற்றன.
ஆங்கிலேயருடன் அரசியல் போட்டிகளில் இறங்கி, நாடு கவரும் முயற்சிகளில்
பிரெஞ்சுக்காரரும் ஈடுபடலாயினர்.

     சோழ மண்டலக் கடற்கரையோரத்தில் ஆங்கிலேயரின் கைவசம் இருந்த
சென்னைப்பட்டினமும், பிரெஞ்சுக்காரரிடம் இருந்த புதுச்சேரியும் இருபெரும்
வாணிகத் துறைமுகப்பட்டினங்களாக விளங்கின. இரு நாட்டினரும் அவரவர்
ஊரில் வலிமை பொருந்திய கோட்டை கொத்தளங்களை எழுப்பினர்.
புதுச்சேரிக்குத் தென்பால் சற்றுத் தொலைவில் அமைந்திருந்த செயின்ட்
டேவிட் கோட்டையும் ஆங்கிலேயர் வசமே இருந்தது. கருநாடகம்
முழுவதிலும் ஐரோப்பியரிடம் மட்டுந்தான் படைப்பலம் குவிந்திருந்தது.
இந்திய நாட்டு மன்னரிடம் தரைப்படையோ கப்பற்படையோ கிடையா.
எனவே, ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உள்நாட்டு மன்னர்களைச்
சூதுக்காய்களாக வைத்துக்கொண்டு அரசியற் பகடையாடத் தொடங்கினர்.

     கருநாடகம் அரசியற்றுறையிலும், சமூகத்துறையிலும் மிகப்பெரும்
கொந்தளிப்பில் ஆழ்ந்திருந்தது. மொகலாயப் பேரரசின்கீழ்த் தக்கணத்துச்
சுபேதாரானவன் ஐதராபாத்தில் அமர்ந்து அரசாண்டுவந்தான். கருநாடகம்
முழுவதும் அவனுடைய ஆணைக்குப் பணிந்து நின்றது. ஆர்க்காட்டு நவாபு
அவன் கீழிருந்து ஆர்க்காட்டுத் தேசத்தை அரசாண்டுவந்தான். தக்கணத்துச்
சுபேதார் நைஜாம் உல் முல்க் என்பவன் டில்லியின் நுகத்தினின்றும் நழுவித்
தானும் ஒரு சுதந்தர மன்னனாகவே நடந்து கொண்டான். அவனைப்
பின்பற்றி, அவன்கீழ்ச் செயல்பட்டு வந்தவனான ஆர்க்காட்டு நவாபும்
அவனுடைய ஆணையினின்றும் விடுதலை பெற்றுத் தானும் ஒரு சுதந்தர
மன்னனாக இயங்கிவரலானான். மொகலாயப் பேரரசின் அரசியற்
குழப்பங்களிலும் மராத்தியர்கள் கொடுத்துவந்த தொல்லைகளிலும் சிக்குண்டு
திணறிக்கொண்டிருந்த நைஜா முக்கு ஆர்க்காட்டு நவாபைக் கண்காணித்து
வரவோ, அவ்வப்போது அவனை இழுத்துப்பிடிக்கவோ நேரமோ, வசதிகளோ
இல்லாமற்போயிற்று. எனினும் கருநாடகத்தின் அரசியலில் தலையிடும் வாய்ப்பு
ஒன்று தானாகவே அவனை நெருங்கி வந்தது.