மராத்தியர்கள் 1740-ஆம் ஆண்டில் கருநாடகத்தின்மேல் பாய்ந்து மக்களைச் சூறையாடினார்கள் ; நாடெங்கும் கொள்ளையும் கொலையும் விளைவித்தார்கள். குழப்பங்களும் கலகங்களும் பேயாட்டமாடின. மக்களின் கண்ணீரிலும் செந்நீரிலும் நாடு தோய்ந்தது. மராத்தியர்கள் ஆர்க்காட்டின்மேல் படையெடுத்து வந்து ஆர்க்காட்டு நவாபு தோஸ்து அலியைக் கொன்று, அவனுடைய மருமகனான சந்தா சாயபுவைச் சத்தா ராவுக்குச் சிறைபிடித்தேகினார்கள் (1741). தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி என்பவன் மராத்தியருக்கு ஒரு கோடி ரூபா இலஞ்சம் கொடுப்பதாக வாக்களித்து நாட்டை மராத்தியரின் கொடுமைகளிலிருந்தும் மீட்டுக்கொண்டான். ஆனால், அவன் வேலூர் இன்னேதாரனான முர்தஸா அலி என்னும் அவனுடைய உறவினனாலேயே கொலையுண்டு இறந்தான். அவனுடைய இளம் மகன் ஆர்க்காட்டு நவாபாகப் பட்டங்கட்டி வைக்கப்பட்டான் (1742). தொடர்ந்து ஏற்பட்ட இந் நிகழ்ச்சிகள் கருநாடகக் குடிமக்களுக்குப் பேரச்சத்தையும் அவலத்தையும் விளைவித்தன. அவர்களுடைய அச்சத்தை மாற்றி அவர்கட்கு ஆறுதல் கூறி நாட்டில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காக நைஜாம் 1743-ல் கருநாடகம் வந்தான். ஆர்க்காட்டின் அரசியல் வக்கணைகளை நிமிர்த்த முயன்றான். தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரனாக இருந்த அன்வாருதீன் கானை ஆர்க்காட்டு நவாபாக நியமித்தான். தோஸ்துகான் இளம் மகன் கொல்லப்பட்டு இறந்தான். நாட்டில் குழப்பங்கள் குறைந்தபாடில்லை. தோஸ்து அலியின் உறவினர்கள் அன்வாருதீன்கானை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யலானார்கள். இவ்வளவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் அமைதியாகத் தத்தம் அளவில் வாணிகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தனர் ; நாட்டு அரசியல் போராட்டங்களில் கலந்துகொள்வதற்கோ, அவற்றால் விளைந்த குழப்பங்களில் தமக்கு ஆக்கம்தேடிக்கொள்ளுவதற்கோ விருப்பமும் முயற்சியும் இழந்தவர்களாகத் தத்தம் கோட்டைகளில் முடங்கிக் கிடந்தனர். ஆனால், தமிழகத்தின் விதியோ மூலையில் கிடந்த அவர்களை முற்றத்தில் இழுத்துவிட்டது. முதல் கருநாடகப் போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய அரசுரிமைப் போட்டி ஒன்றில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிர்க்கட்சிகளுக்குத் துணை நின்று ஏழாண்டுக்காலம் போரில் ஈடுபட்டிருந்தனர் (1742-48). அக் காரணத்தால் இந்தியாவிலும் அவ்விரு நாட்டுக் கம்பெனிகளுக்குமிடையே பகையும் போரும் மூண்டன. |