புதுச்சேரிக் கவர்னர் டூப்ளே ஆங்கிலேயருடன் போரிட விரும்பவில்லை. கருநாடகத்தில் கட்சிச் சார்பின்றிப் பகையின்றிச் சமாதான முறையிலேயே நடந்துகொள்ள எண்ணங்கொண்டான். அவனுடைய எண்ணத்தின்படி போர் நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கு ஆங்கிலேயர் ஒருப்பட்டிலர். ஆகவே, கருநாடகத்திலும் முற்றுகைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தன. பிரெஞ்சுக்காரர்கள் தக்கதொரு கடற்படையுடன் சென்னையைக் கைப்பற்றினர் (1746). டூப்ளேயின் வாழ்விலும் அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை விழுந்தது. ஆனால், மக்கள் சமூக வரலாறு ஒரு கொள்ளிவட்டம் போன்றது. நிகழ்ச்சிகள் சுழன்றுகொண்டே இருக்கும். கருநாடக வரலாற்றிலும், டூப்ளேயின் வாழ்விலும் மிகப் பெரியதொரு நிகழ்ச்சி இடங்கொள்ளக் காத்துக்கொண்டிருந்தது. தன் தேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் சுழல்களைக் கண்டு வாளாவிருக்க அன்வாருதீன்கான் விரும்பினானல்லன். தன் காவலின்கீழ் வாழ்ந்துவந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சுக்காரரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புத் தனக்கு உண்டு என்று உணர்ந்திருந்தான். சென்னையைப் பிரெஞ்சுக்காரர் முற்றுகையிட்டிருந்தபோது தமக்குப் பாதுகாப்பளிக்குமாறு அன்வாருதீனிடம் ஆங்கிலேயர் முறையிட்டுக்கொண்டனர். அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி அன்வாருதீன்கான் முற்றுகையை விலக்கிக் கொள்ளும்படி பிரெஞ்சுக்காரருக்கு ஆணை ஒன்று அனுப்பினான். பிரெஞ்சுக்காரர் அதற்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் தன்னை அசட்டை செய்ததற்காக ஆர்க்காட்டு நவாபு வெகுண்டான் ; சென்னையை வளைத்துக்கொண்டு பிரெஞ்சுக்காரரைத் தாக்கும்படி ஒரு படையை ஏவினான். ஆனால், வெற்றி பிரெஞ்சுக்காரர்களுக்கே கிடைத்தது. அவர்களுடைய பெருமையும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தன. டூப்ளே சென்னையை ‘அடி முதல் முடி வரையில்’ சூறையாடினான் (1746). டூப்ளேயின் நெஞ்சுரம் மேலும் வலுவடைந்தது. அவன் செயின்ட் டேவிட் கோட்டையைப் பதினெட்டு மாத காலம் முற்றுகையிட்டான்; ஆனால், அவனால் வெற்றி காண வியலவில்லை. ஆங்கிலேயரின் உதவிக்குப் புதியதாகத் தரைப்படையும் கடற்படையும் வந்து சேர்ந்தன. அவர்கள் அவற்றைக்கொண்டு கடல், தரை ஆகிய இரு முனைகளிலும் புதுச்சேரியைத் தாக்கினார்கள். ஆனால், அவர்கள் ஏவிய படைகள் போதுமளவு பயிற்சி பெறாதவை ; வெற்றி நெருங்குவதாகத் தெரியவில்லை. அதற்குள் ஐரோப்பாவில் ஆஸ்திரிய அரசுரிமைப் போரில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அவ்வுடன்படிக்கையின்படி |