சென்னையானது மீண்டும் ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் கருநாடகப் போர் முதல் கருநாடகப் போர் டூப்ளேயின் சிந்தனையைத் தூண்டி விட்டது. ஆங்கிலேயருடன் அவன் மேற்கொண்ட அரசியல் சதுரங்கத்தில் அவன் பல நுட்பங்களையும் ஊகங்களையும் படித்தறிந்தான். அன்வாருதீன்கானின் சேனைகள் சென்னை முற்றுகையில் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததையும், ஆனால் திறமான படைப்பயிற்சியும், சிறந்த ஆயுத பலமும் தனக்கு வெற்றி தேடித் தந்ததையும் அவன் நன்கு உணர்ந்துகொண்டான். நல்ல பயிற்சியளிக்கப்பட்ட ஒருசில ஐரோப்பிய வீரருக்கு முன்பு ஆயிரக்கணக்கான, பயிற்சியளிக்கப்படாத இந்தியச் சிப்பாய்களால் முனைந்து நிற்கமுடியாது என்பதை அவன் கண்டறிந்தான். எனவே, கட்டுப்பாடும், ஒருமைப்பாடும், நெஞ்சுரமும் கொண்டிருந்த தன் படையைப் பெரிதும் நம்பி அரசியல் நடைமுறைகளைச் சீரமைத்துக் கொண்டான். போர்ப் பயிற்சியும், ஆயுத பலமும் வாய்க்கப் பெற்ற அவனுடைய படைகளின் துணையை நாடி உள்நாட்டு மன்னர் யாவரும் எப்போதும் தன்னிடம் வரக்கூடும் என்று டூப்ளே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அஃதுடன் தன் படை சாயுமிடமே வெற்றியும் சாயும் என்ற உண்மையையும் அவன் உணர்ந்திருந்தான். மராத்தியரால் 1741-ல் சிறைபிடிக்கப்பட்ட சந்தா சாயபு ஏழாண்டுகள் கழித்து விடுதலையானான். உடனே தன் மாமனார் தோஸ்து அலியிடமிருந்து பறிக்கப்பட்ட ஆர்க்காட்டு அரசை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினான். அதே சமயம் நைஜாம் உல் முல்க் காலமானான் (1748). அவனுக்குப் பின் அவன் மகன் நாஜர் ஜங் தக்கணத்தின் சுபேதாரானான். ஆனால், அவனுடைய பேரனான முஜாபர் ஜங் என்பவன் முகலாயப் பேரரசன் தன்னைத்தான் சுபேதாராக நியமித்துள்ளான் என்று கூறிக்கொண்டு தக்கணத்து அரியணைக்கு உரிமை கொண்டாடினான். இத்தகைய நல்வாய்ப்பையே டூப்ளே எதிர்நோக்கி நின்றான். ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகும் படிப்பினை’யை டூப்ளே நன்கு ஓர்ந்தவன். காலந்தாழ்த்தாமல் செயலில் இறங்கினான். ஆர்க்காட்டு அரியணையில் ஏற்றுவிப்பதாகச் சாந்தா சாயபுவினிடம், தக்கணத்து அரியணையில் ஏற்றுவிப்பதாக முஜாபர் ஜங்குடனும் அவன் இரு உடன்படிக்கைகள் செய்து கொண்டான். |