உடன்படிக்கைகளும் உடனே நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டன. டூப்ளேயும், சாந்தா சாயபுவும், முஜாபர் ஜங்கும் கூட்டுக்கூடி அன்வாருதீன்கானை ஆம்பூரில் போரில் கொன்றார்கள் (1749). அன்வாருதீன்கான் மகன் முகமதலி திருச்சிராப்பள்ளிக்கு ஓடிவிட்டான். அவனைத் துரத்திக்கொண்டு பிரெஞ்சுப் படையொன்று திருச்சிராப்பள்ளியை நோக்கி விரைந்தது. தம்மை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த பேராபத்தை உணர்ந்தனர் ஆங்கிலேயர். தமக்கு உடனே துணை வரும்படி நாஜர் ஜங்குக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். அஃதுடன் அமையாது அவர்கள் முகமதலியின் உதவிக்குத் திருச்சிராப்பள்ளிக்கு ஒரு சிறு படையையும் அனுப்பிவைத்தார்கள். ஆங்கிலேயரின் முறையீட்டுக்கு இணைங்கி நாஜர் ஜங்கும் தண்டெடுத்து வந்தான். ஆங்கிலேயருக்குப் போர்த்திறன் போதவில்லை யாதலால் நாஜர் ஜங் கொலையுண்டு மாண்டான் (1750). சிறையில் அடைப்பட்டுக்கிடந்த முஜாபர் ஜங் விடுதலை பெற்றுச் சுபேதாராக ஏற்றம் பெற்றான். செய்ந்நன்றி மறவாத முஜாபர் ஜங் டூப்ளேயுக்குச் சில கைம்மாறுகளைக் கனிந்து செய்தான். புதுச்சேரியைச் சுற்றியுள்ள சில நிலப் பகுதிகளையும், ஒரிஸ்ஸாவைச் சுற்றியுள்ள சில நிலப்பகுதிகளையும் மசூலிப்பட்டினத்தையும் டூப்ளேயுக்கு வழங்கினான். போதாக்குறைக்குக் கிருஷ்ணை நதிக்குத் தென்புறத்தில் முகலாயப் பேரரசுக்குச் சொந்தமான நிலப்பகுதிக்கு டூப்ளேயைக் கவர்னராக நியமித்தான். புதிய பதவிகளின் மோகத்தில் மூழ்கிய டூப்ளேயானவன் உதவிக்குக் கூப்பிட்டபோது விரைந்து செல்லுவதற்காகக் கர்னல் புஸ்ஸி என்ற படைத்தலைவன் தலைமையில் சேனை ஒன்றையும் ஐதராபாத்தில் நிறுத்திவைத்தான். டூப்ளே ஆர்க்காட்டையும் ஐதராபாத்தையும் நோக்கி விம்மிதம் எய்தினான். தனக்கு ஆட்பட்ட இருவர் இரு தேசங்களின் அரியணைகளில் அமர்ந்து ஆட்சி புரிந்துவந்தது அவனுக்கு எல்லையில்லாப் பூரிப்பைக் கொடுத்தது. பிழைப்பைத் தேடிக் கடல்கடந்து வந்த அன்னிய வணிகக் கூட்டம் ஒன்று இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த இரண்டாண்டுக் காலத்தில் தக்கணத்திலும் கருநாடகத்திலும் அரசாட்சி அமைத்துக்கொண்டும், மேலாதிக்கத்தை விரித்து ஓங்கி நிற்குமாயின், டூப்ளேயின் இதயம் விம்மி வழிந்ததில் வியப்பேதுமில்லை. அவனுடைய நண்பர்களும் அவனுக்கு எய்திய உன்னத அரசியல் ஏற்றத்தைக் கண்டு திகைப்புற்றுப் போயினர். திருச்சிராப்பள்ளியை நோக்கி விரைந்த பிரெஞ்சு அணிகள் வழியில் தஞ்சாவூரை முற்றுகையிட்டு அவ்விடத்திலேயே களைத்துப் |