பக்கம் எண் :

464தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

போயின. அதே சமயம் ஆங்கிலேயரின் துணையைப் பெற்ற முகமதலியின்
எதிர்ப்பும் கடுமையாயிற்று. ஆங்கிலேயரின் படை வலி முழுவதும் தன்வசம்
அடையும் வரையில் முகமதலி பிரெஞ்சுக்காரரிடம் சமாதானப் பேச்சுகள்
பேசிக் காலந் தாழ்த்தி வந்தான். அவனுடைய உத்தியை டூப்ளே 1751-ஆம்
ஆண்டு மே மாதந்தான் நன்கு உணர்ந்தான். உடனே தானும் ‘லா’ என்பவன்
தலைமையில் திருச்சிராப்பள்ளியை நோக்கி ஒரு படையை ஏவினான்.
லாவுக்குப் போர்த் தந்திரங்கள் போதாவாயின. திருச்சிராப்பள்ளி முற்றுகை
நீடித்துக்கொண்டே போயிற்று. ஆங்கிலேயருக்கு மைசூர், தஞ்சாவூர்
மன்னர்களும், மராத்தியத் தலைவன் முராரி ராவும் படைத்துணை அனுப்பி
வைத்தனர். வங்கத்திலிருந்து ஆங்கிலேயப்படை ஒன்று தமிழகத்தை நோக்கி
விரைந்தது. அப் படையில் முந்நூறு சிப்பாய்களும், இருநூறு ஆங்கிலேயரும்
மட்டுமே இருந்தனர். அப்படையைச் செலுத்தி வந்தவன் ராபர்ட் கிளைவ்
என்பவன். அவன் சென்னைக் கம்பெனியில் எழுத்தனாகப் பணியாற்ற
வந்தவன். இராணுவத்தில் சேர்ந்து வெகு குறுகிய காலத்தில்
படைத்தலைமையும் எய்தினான். பேரெதிர்ப்பு ஏதும் இன்றியே கிளைவ்
ஆர்க்காட்டை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டான். அவனிடமிருந்து
தன் தலைநகரை மீட்டுக்கொள்ளுவதற்காகச் சந்தா சாயபு
திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆர்க்காட்டுக்கு ஒரு சேனையை அனுப்பினான்.
கிளைவ் ஐம்பத்து மூன்று நாள் அப்படையுடன் பொருது வெற்றிகண்டான்.
சந்தா சாயபுவின் படைகள் தோற்றுப் புறமுதுகிட்டன (1751). ஆங்கிலேயரின்
ஆர்க்காட்டு வெற்றியானது அவர்களுடைய பகைவருக்கு அச்சத்தையும்
அதிர்ச்சியையும் விளைத்தது. என்றும் இராத அளவு அவர்களுடைய மதிப்பும்
உயர்ந்துவிட்டது. பிரெஞ்சுப் படைத்தலைவன் ‘லா’ என்பவன்
ஆங்கிலேயருடைய மாபெரும் வெற்றியைக் கேள்வியுற்று வெருண்டு
திருவரங்கத்தில் ஓடி ஒளிந்தான். திருவரங்கத்தை வளைத்துக் கொள்ளுமாறு
ஆங்கிலேயப் படைக்குக் கிளைவ் ஆணையிட்டான். சந்தா சாயபுவின்
துணைக்கு டூப்ளே ஓர் அணியை அனுப்புவித்தான். ஆனால், அப்
படையானது நிலைகுலைந்து முற்றுகையைக் கைவிட்டு ஆங்கிலேயரிடம்
அடைக்கலம் புகுந்தது (ஜூன் 1752). லாவும், அவனுடைய படையினரும்
ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டனர். தஞ்சாவூர்ப் படைத் தலைவன்
ஒருவனுடைய வாளுக்கிரையாகிச் சந்தா சாயபுவின் தலை தரையில்
உருண்டது.

     டூப்ளே ஏங்கி நின்றான். அவன் எழுப்பிய மனக்கோட்டைகள் யாவும்
இடிந்து தரைமட்டமாயின. திறமையற்ற