கட்டபொம்மன் காட்டில் ஒளிந்து தப்பித்துக்கொண்டான். புதுக்கோட்டை மன்னனான விசய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு முதலில் அடைக்கலம் கொடுத்துப் பிறகு அவனைக் கம்பெனியிடம் காட்டிக் கொடுத்துவிட்டான். பானர்மேன் கட்டபொம்மன் மேல் பல குற்றச்சாட்டுகளைப் படித்தான். கட்டபொம்மன் பற்றலரை வணங்கி வளையாத கற்றூணாக வாழ்ந்தவன். ஆகையால், அக் குற்றச்சாட்டுகளைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொண்டான். பானர்மேன் தீர்ப்பின்படி கட்டபொம்மன் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப் பட்டான். வீரப்பொலிவைக் கண்களில் கொண்டு, தன்னைக் காட்டிக்கொடுத்த பாளையக்காரர்களின்மேல் தனக்குள் பொங்கி எழுந்த வெறுப்பையும் ஏளனத்தையும் தன் புன்னகையில் தோற்றுவித்துக் கட்டபொம்மன் தூக்குமரம் ஏறினான். கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துச் சுதந்தரப் புரட்சியைத் தோற்றுவித்தான் என்றோ, நாட்டின் சுதந்தரத்தையும் குடிமக்கள் நலனையும் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தான் என்றோ கொள்ளுவதற்கில்லை; எனினும், வளர்ந்து வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசைத் தன்னளவில் எதிர்த்து நின்று தன்னந்தனியாகப் போரிட்டு மாண்ட கட்டபொம்மனுடைய புகழ் நாட்டுப் பாடல்களிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பொங்கி வருவதில் வியப்பேதுமில்லை. அயல்நாட்டு அரசை எதிர்த்து நின்று போராடிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஏனைய பாளையக்காரரின் இழிநிலை தமிழ்நாட்டு வரலாற்றில் பதிந்துவிட்டது. மருது பாண்டியர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமையானது பெரிய மருதுபாண்டியர் என்பவரின் ஆட்சியுடைமையாயிற்று. அவருடைய தம்பி சின்ன மருது என்பார், அவருக்குப் பெருந் துணையாக நின்றார். இவ்விரு சகோதரர்களிடத்தும் புதுக்கோட்டைத் தொண்டைமான் பகைமை காட்டினான். இவர்கட்கு எதிராக ஆங்கிலேயருக்குப் பல வகையில் அவன் உதவிகள் புரிந்தான். இவ்விரு சகோதரரின் ஆட்சி இருபத்தோராண்டுகள் (1780-1801) நீடித்தன. அவர்கள் நாட்டில் பல ஆக்கப் பணிகளைச் செய்தார்கள். புதுக்கோட்டைத் தொண்டைமான் இவர்கள்மேல் கொண்ட பூசல் வளர்ந்துகொண்டே போயிற்று. ஆங்கிலேயர் மருது சகோதரர்களை அரியணையினின்றும் இறக்கிவிட்டு உடையத் |