தேவன் என்ற ஒருவனை மன்னனாக்கினர்; மருதுபாண்டியரைச் சிறைபிடிக்க முயன்றனர். ஆனால் மருதுபாண்டியர் காடுகளில் ஓடி ஒளிந்தனர். கைக்கூலிக்கு நப்பாசை கொண்ட பலர் மருது பாண்டியரின் தலைகளுக்காகப் பல இடங்களில் அலைந்தனர். இறுதியில் மருது பாண்டியர் கம்பெனியின் சேனாதிபதி ஒருவனிடம் சிக்குண்டார்கள். அவர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும், நண்பரும் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு மாண்டனர். அவர்களோடு பாளையக்காரர் ஆங்கிலேயருக்குக் கொடுத்துவந்த தொல்லைகளும் ஓய்ந்தன. தீர்த்தகிரி தமிழக விடுதலைப் போரில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதிருவர் முதலியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்குநாட்டில் கிளர்ச்சி நடந்தது. ‘தீர்த்தகிரி’ என்ற கொங்கு நாட்டு வீரன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினான்; 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து நின்றான். இவன் கொங்கு நாட்டில் ‘ஓடாநிலை’ என்னும் ஊரில் கோட்டை கட்டி ஒரு படையைத் திரட்டி எதிரிகளுடன் போரிட்டான். இவனையும் ஆங்கிலேயர் 1805-ல் அடக்கினர். தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவன் தீர்த்தகிரியே. இவன் ‘தீரன் சின்னமலை’ என்னும் பெயரால் தமிழக வரலாற்றில் புகழ் பெற்றான். |