தமக்குப் போதிய ஊதியமும், உரிமைகளும், கௌரவமும் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் முறையிட்டுக் கொண்டனர். பென்டிங்க் பிரபுவும், தலைமைச் சேனாதிபதி சர் ஜான் கிரேடாக் (Sir John Cradock) என்பாரும் பதவியை இழந்து தம் தாய்நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பென்டிங்க் பிரபுவுக்குப் பிறகு சர் ஜார்ஜ் பார்லோ (Sir George Barlow) என்பார் சென்னையில் கவர்னராக நியமிக்கப்பட்டார் (1807-13). வெள்ளையர் கலகம் முதிர்ந்தது. அவர்களுடைய கலகத்துக்கு இந்தியச் சிப்பாய்கள் உடன்பட்டிருக்க மறுத்துவிட்டனர். கிளர்ச்சி மசூலிப்பட்டினம், செகந்திரபாது, ஜௌல்னா, சீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களிலும் பரவிற்று. இரண்டு மாதங்கள் நெருக்கடி நிலையில் நெருப்புப் பறந்தது. கவர்னர்-ஜெனரலாக இருந்த மின்டோ பிரபு (Lord Minto) நேரில் வந்து இக் கிளர்ச்சியைத் தீர்த்து வைத்தார். சென்னை நகரம் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆங்கிலேயர் பூம்பொழில் சூழ்ந்த மாளிகையில் வசித்து வந்தனர். அவர்களுக்கென நகரில் ஒரு தனிப்பகுதி ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு மாளிகையும் மிகவும் விரிவான, பல ஏக்கர்கள் பரப்புள்ள பூம்பொழிலுக்கிடையே அமைக்கப்பட்டிருந்தது. அரசினர் இல்லம் (Government House) விசாலமான ஒரு வெட்ட வெளியில் நின்றிருந்தது. அங்கிருந்தே கோட்டையையும், சுருண்டெழுந்துவரும் நீலத்திரைக் கடலையும் கண்டுகளிக்கலாம். கருநாடக நவாபிற்குச் சொந்தமான சேப்பாக்கத் தோட்டங்களில் அவனுடைய அழகான அரண்மனை அமைந்திருந்தது. இம் மாளிகை முழுவதும் பல்வண்ணச் சுண்ணாம்பால் கட்டப்பட்டது. சலவைக் கல்லையும் மிஞ்சிய தோற்றமும், பொலிவும், பளபளப்பும் அச் சுண்ணாம்பின் இழைப்பில் காணலாம். குளிர்ந்த நெருங்கிய மரங்கள் வாலாஜா சாலையின் இருபுறங்களையும் அணிசெய்து நின்றன. இந்தியர்கள் ‘கறுப்பு நகர்’ என்ற பகுதியில் வாழ்ந்திருந்தனர். குடைக்கும் கொடிக்கும் தம்முள் ஒருவரோடொருவர் போராடி இரத்தம் சிந்திய அவர்கள் தம்மை இழிவுபடுத்திய இப் பெயரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவில்லை. பெத்துநாய்க்கன்பேட்டையிலும், முத்தியால்பேட்டையிலும் இந்தியர் நெருங்கி வாழ்ந்து வந்தார்கள். இப்போது பிரகாசம் சாலை எனும் பெயரில் வழங்கும் சாலை அப்போது ஓர் ஓடையாக இருந்தது. பின்னர் அதை ஸ்டீபன் போப்ஹாம் (Stephen Popham) என்பவர் அழகிய, நீண்டதொரு சாலையாக மாற்றினார். இன்றும் அச் |