சாலையானது அவருடைய பெயராலும் வழங்கி வருகின்றது. கறுப்பு மக்கள் என்று இழித்துக்கூறப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த இடம் மிகமிக நெருக்கமாகவும், சுகாதார வசதிகள் ஏதும் இன்றியும் நாற்றமெடுத்துக் கொண்டிருந்தது. குப்பை வாருவதற்கும், கழிவு நீரை அகற்றுவதற்கும் கம்பெனி அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தொடக்கத்தில் பயனற்றுப் போயின. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருந்துவந்த இடங்களில் நிலவரியே சிறப்பான வருவாயாக இருந்தது. ஆங்கிலேயர் பல இடங்களைப் பல மன்னர்களிடமிருந்து பல முறைகளைக் கையாண்டு கைப்பற்றி இணைத்துக்கொண்டார்கள். ஆகையால் தமிழகத்தில் இடந்தோறும் வரிகளும், வரிவிதிப்பு முறைகளும் மாறுபட்டுக் காணப்பட்டன. சோழர், பாண்டியர், விசயநகர அரசர்கள் காலத்து வழங்கிய பல வரிகள் கைவிடப் பட்டன. பல வரிகள் பெயர் மாற்றங்கொண்டு புதிய வரிகளாக வழங்கலாயின. ஆங்கிலேய அரசாங்கம் இவ் வரிகள் அனைத்தையும் தொகுத்து ஓர் ஒழுங்குமுறைக்குக் கொண்டு வந்தது. நாட்டில் பல இடங்களில் குடிமக்கள் தாம் உழுது பயிரிட்டு வந்த நிலங்களின்மேல் சொத்துரிமை பெற்றிருந்தனர். அந் நிலங்களைத் தடையேது மின்றிப் பயிரிடவும், குத்தகைக்கு விடவும், விற்கவும் அவர்களுக்கு உரிமையிருந்தது. இக் குடிமக்கள் அரசாங்கத்துக்குத் தாமே நேரில் வரிகட்டி வந்தனர். இந்தக் குடியுரிமைக்கு ‘ரயத்துவாரி’ முறை என்று பெயர். முப்பதாண்டுகட்கு ஒருமுறை நிலவரி விகிதங்கள் மாற்றப்பட வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குடிமக்களிடமிருந்து நிலத்தைப் பறித்துக்கொள்ளவோ முப்பதாண்டுகட்குள் வரிவிகிதத்தை மாற்றவோ அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை. ‘மிராஸ்தாரி முறை’ என்று மற்றொரு நிலவரி முறையும் தமிழகத்தில் சில இடங்களில் வழக்கில் இருந்து வந்தது. நாயக்கர் ஆட்சியிலும், அது முடிவுற்ற பிறகும் நாட்டில் நூற்றுக்கணக்கான பாளையக்காரர்கள் தனித்தனிப் பாளையப் பட்டுகளில் தனியரசு செலுத்தி வந்தனர். குடிமக்களின் தேவை நிறைவுகளையும், நீதிநிருவாகத்தையும் அவர்கள் கண்காணித்து வந்தனர். பாளையக்காரரிடம் சிறுசிறு படைகளும் இருந்து வந்தன. ஆங்கிலேய அரசாங்கம் அப் படைகளைக் கலைத்துவிட்டது; நீதிநிருவாகத்தைத் தானே மேற்கொண்டது. பாளையக்காரர்கள், தம் குடிமக்களிடமிருந்து தண்டிய வரித் தொகையில் ஒரு பகுதியைத் தம் செலவுக்காக நிறுத்திக்கொண்டு எஞ்சியதை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய |