பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 483

கடமைக்குள்ளானார்கள். அவர்களுக்குப் பாளையக்காரர்கள் என்ற பெயர்
மாறி, ஜமீன்தாரர்கள் என்றும், ஜாகீர்தாரர்கள் என்றும், மிட்டாதாரர்கள்
என்றும், பட்டகாரர்கள் என்றும் பல பெயர்கள் ஏற்பட்டன. எண்ணற்ற
வரிகளின் சுமை, வரி தண்டியவர்களின் கொடுமைகள், ஊருக்கு ஒரு வரி,
குலத்துக்கு ஒரு வரி என்ற சிக்கலான, முறைகேடான சட்டங்கள் மாறித்
தமிழகம் முழுவதற்கும் ஒரே அரசியல், ஒரே நீதி என்ற ஒருமைப்பாடு
நிறுவப்பட்டது.

     தென்னிந்தியாவில் சில பகுதிகள் ஆங்கிலேயரின் நேர்முக
ஆட்சிக்குள்ளடங்கி இருந்தன. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மைசூர்,
திருவிதாங்கூர் ஆகியவை, மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்துவந்தன.
நேர்முக ஆட்சிப் பகுதிகள் அனைத்தையும் இணைத்துச் சென்னை மாகாணம்
என்று தனி மாகாணம் ஒன்று அமைத்தனர். சென்னை மாகாணம்
இருபத்தைந்து மாவட்டகளாகப் பிரிக்கப்பட்டது. இம் மாகாணத்தில்
மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த
பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

     சென்னை மாகாணத்தின் ஆட்சித் தலைவராகக் கவர்னர் ஒருவர்
தொடர்ந்து செயல்பட்டு வந்தார். நிலவரி வசூல், நிலங்களின் தரப்பிரிப்பு
முதலிய கடமைகளைப் புரிவதற்காக ரெவினியூ போர்டு (Revenue Board)
அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கலெக்டர் (Collector)
நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுக்காக்களாகவும்,
ஒவ்வொரு தாலுக்காவும் பல பிர்க்காக்களாகவும் பிரித்து அமைக்கப்பட்டன.
தாலுக்காவின் ஆட்சி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடக்கத்தில்
ஊர்க்காவல் பொறுப்பும் குற்ற விசாரணைப் பொறுப்பும் மாவட்ட நீதிபதியிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தன. பிறகு அவை மாவட்டக் கலெக்டர்களுக்கு
மாற்றப்பட்டன.

     ஹியூஜ் எலியட் (Rt. Hon’ble Huge Elliot) ஆறாண்டுகள் கவர்னராகப்
பணியாற்றினார். இவருடைய மகன் எட்வர்டு எலியட் என்பவர் செஷன்ஸ்
நீதிபதியாக இருந்தார். கவர்னர் எலியட் காலத்தில் நீதி நிருவாகத்தில் சில
நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன. அவருக்குப் பிறகு கவர்னராகப் பதவியில்
அமரவிருந்த சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Munro) என்பவரின்
தலைமையில் நீதிச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது (1814). இம்
மன்றோதாம் ரயத்துவாரிக் குடிமுறையை அமைத்தவர்.