மன்றோ தம் குழுவினரும் தாமும் கூடி ஆராய்ந்து வகுத்த முடிவைக் கம்பெனி ஆணையினருக்குத் (Board of Control) தெரிவித்தார். கவர்னர் எலியட் அவருடைய முடிவை முழுமனத்துடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் மன்றோ செய்த தம் அறிக்கையில் கண்டிருந்த சீர்திருத்தக் குறிப்புகள் அனைத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றின் படி போலீசும் மாவட்ட மாஜிஸ்டிரேட் (District Magistrate) என்ற பதவிப் பொறுப்பும் மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு மாவட்டக் கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கிராமத்துக் காவல் பரம்பரை உரிமையாக்கப்பட்டு அதற்குத் தலையாரிகள் அமர்த்தப்பட்டனர். ஊர் மணியக்காரர் சிறு வழக்குகளை விசாரித்து நீதிவழங்கும் கடமையையும் ஏற்றனர். கிராமங்களில் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. அவை மத்தியஸ்தம் செய்து தீர்ப்புகள் வழங்கவும் உரிமை பெற்றன. ஏற்கெனவே சிப்பாய்கள் செய்து கொண்டுவந்த ஊர்க் காவல் முதலிய கடமைகளைப் போலீஸ்காரர்கள் ஏற்றுச் செய்யலானார்கள். சென்னையில் 1801-ல் தலைமை நீதிமன்றம் (Supreme Court) ஒன்று அமைக்கப்பட்டது. 1831-ல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்குக் குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. நிலம், நிலவரி ஆகியவற்றுக்குத் தொடர்புகொண்ட வழக்குகளைக் கலெக்டர்களே விசாரித்துத் தீர்ப்புக் கூறிவந்தனர். நூற்றுக்கணக்கான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சாத்திரங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றின்கீழ்க் குற்றங்களும் சொத்துரிமை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன. அதனால் ஏற்பட்ட அநீதியையும், குழப்பங்களையும், மனப்பொருமல்களையும் தவிர்க்கும்பொருட்டு மெக்காலே பிரபு (Lord Macaulay) என்பவரின் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவரும் அக் குழுவினரும் அரும்பாடுபட்டு இந்திய நாடு முழுவதற்கும் ஒரே சட்டம் செயல்படவேண்டும் என்ற நீயதியின் அடிப்படையில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர். அவ் வறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இந்தியச் சிவில் நடைமுறைச் சட்டம் (Indian Civil Procedure Code of 1859); இந்தியக் குற்றச் சட்டம் (Indian Penal Code of 1860) இவற்றை இயற்றியது. விசாரணை முறையில் கையாள வேண்டிய ஒழுங்கு விதிகளுக்கும், நேர்மைக்கும், சட்ட நுட்பங்களுக்கும் ஈடிணையற்ற சட்டங்களாக இவை விளங்கி வருவதுமன்றி உலகப் பாராட்டும் பெற்றுவிட்டன. அவற்றைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குற்ற விசாரணை ஒழுங்குமுறைச் சட்டம் |