இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள்; கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வாணிகத்தில் உதவி வந்தவர்கள். வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் குறுக்கிட்டுக் கோட்டைக்குச் சென்றபோது தம் முன்பு தப்பட்டை அடித்துக் கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக் கொண்டும் நடந்தார்கள். அவ்வாறு செல்லுவதற்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தம் அவர்கட்கு இடந்தரவில்லை. எனவே, அவர்கள் நடத்தையை எதிர்த்து இடங்கையினர் கவர்னருக்கு முறையிட்டுக் கொண்டனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொதுவென்றும், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செல்லும் உரிமை ஏதும் கிடையாது என்றும் அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. திருவொற்றியூர்க் கோயில் இடங்கைத் தேப்பெருமாள் செட்டியின் நிருவாகத்தில் நடைபெற்று வந்தது. அது எல்லாக் குலத்தினருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால், வலங்கையினர் பறையரைக்கொண்டு இடங்கையினரை அடிக்கச் சொன்னார்கள் என்று தேப்பெருமாள் செட்டியார் அரசாங்கத்தினிடம் முறையிட்டார். இத்தகைய கலகங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வந்தன. ஒரு முறை சாந்தோம் சர்ச்சுக்கு அண்மையில் ஒரு பூசல் நேரிட்டது. அங்குக் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அத் திருவிழாவின்போது இடங்கையினர் ஐவண்ணப்பட்டுக் கொடிகளைக் கயிறுகளில் கோத்துத் தெருக்களின் குறுக்கே கட்டுவதற்கு உரிமை பெற்றிருந்தனர். ஆனால், வலங்கையினர் வெண்ணிறக் கொடியை மட்டுந்தான் கட்டி வைக்கலாம். இடங்கையினர் வலங்கையினரின்மேல் அரசாங்கத்தினிடம் முறையிட்டுக் கொண்டனர். திருவிழாக்களின் போது தெருக்களின் குறுக்கே எந்தவிதமான கொடியையும் கட்டக்கூடாது என்று அரசாங்கத்தின் கட்டளை பிறந்தது (1790 ஏப்ரல் 12). வலங்கை-இடங்கைக் கலகம் ஏகாம்பரநாதர் கோயிலிலும் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் வடகலை வைணவருக்கும் தென்கலை வைணவருக்குமிடையே போராட்டங்கள் தோன்றி, அவற்றை இரு கட்சியினரும் அரசாங்கத்தின் தீர்ப்புக்கு விட்டனர். கல்வி ஆங்கிலேயரின் ஆட்சியினால் இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட மாபெரும் நன்மைகள் இரண்டு: இந்தியா ஒரு நாடாக அமைந்தது ஒன்று; இந்திய மக்கள் ஆங்கிலம் பயில வாய்ப்பு ஏற்பட்டது மற்றொன்று. |