வரலாற்று நிகழ்ச்சிகளின் காரணமாகத் தமிழ்மொழியில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் அன்னிய மொழிச் சொற்கள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுவிட்டன. பேச்சு மொழிக்கும், பயிற்சி மொழிக்குமிடையே ஆழ்ந்த வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே, கல்வி சுற்றுத் தெளிவு பெறாதவர்கள் தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் பயில இயலாதவர்களானார்கள். பொதுமக்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. கிராமங்களில் சிறுசிறு பள்ளிக் கூடங்கள் நடைபெற்று வந்தன. தனித்தனி ஆசிரியர்கள் அவற்றைத் திண்ணைகளின் மேலும், தெருநடைகளிலும் நடத்தி வந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் சிறு ஊதியம், அரசாங்கம் அளித்த மானியம், குடிமக்கள் அளித்த மேரைகள் ஆகியவற்றைக்கொண்டு ஆசிரியர்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். மாணவர்கள் அமாவாசைதோறும் ‘லீவு’ (விடுமுறை) பெற்றனர். அதற்காக அவர்கள் அமாவாசைக்கு முந்திய நாள் ‘வாவரிசி’ ஆசிரியருக்குக் கொண்டுவந்து கொடுப்பர். அஃதன்றிச் சனிக்கிழமைகளில் மாணவர்கள் எரு முட்டை, நல்லெண்ணெய், காய்கறிகள் முதலியவற்றையும் ஆசிரியருக்குக் கொண்டுவந்து கொடுப்பதுண்டு. புரட்டாசி மாதங்களில் தசராவின் ஒன்பதாம் நாள், நவமியன்று ஆசிரியர்கள் தம் மாணவர்கள் கற்ற வித்தை, பாடும் பாட்டு, ஆடும் ஆட்டம் ஆகியவற்றை வீடுதோறும் குடிகளுக்குக் காட்டிச் சன்மானம் பெறுவார்கள். திண்ணைப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஒரு சில உயர்குலத்தினருக்கே கிடைத்தது. தொழிலாளர்கள் தம் மக்களை இளமையிலேயே தத்தம் குலத்தொழிலில் ஈடுபடுத்திப் பயிற்சியளித்து வந்தனர். அவ்விளைஞர்களுக்கு எழுத்து மணமே இல்லாமற் போயிற்று. திண்ணைப்பள்ளிப் பயிற்சியும் இரண்டாண்டுகளுக்குமேல் நீடிப்பதில்லை. மாணவர்கள் எழுத்தைக் கற்றவுடனே தமிழில் உள்ள பல நீதிநூல்களையும் சதகங்களையும் மனப்பாடம் செய்வார்கள். அவர்கள் கற்ற கல்வியில் விரிவோ ஆழமோ கிடையாது. மாணவர்கள் செய்யும் பிழைகளுக்கு ஆசிரியர்கள் கொடுத்த தண்டனைகள் மிகவும் கொடுமையானதாக இருந்து வந்தன. மாணவனைக் கோதண்டத்தில் மாட்டியடிப்பதும், அவர்களுடைய விரல்களை வைத்து மணலில் தேய்ப்பதும் ஆசிரியர்கள் கொடுத்த தண்டனைகளில் சில. மாணவர்களைத் தூக்கி, அவர்களுடைய இரு கைகளையும் தூலத்தில் கட்டி அவர்களைத் தொங்கவிட்டு அடிப்பதற்குத்தான் கோதண்டம் மாட்டுதல் என்று பெயர். படிப்பு வாராத மாணவர்களின் |