அம்மையாருடையதாகும். ஆனால், இன்றுவரை தமிழ்ச் சமயநூல்கள் இச் சபையோரின் கவனத்திற்கு வரவில்லை. பஞ்சம் தமிழகத்தில் 1876-78ஆம் ஆண்டுகளில் மாபெரும் பஞ்சம் ஒன்று தோன்றி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது. இதனைத் தாது- சுவர ஆண்டுக் கருப்பு என்று குறிப்பிடுவார்கள். இக் கருப்பினால் அதிகமான உயிர்ச்சேதம் வட ஆர்க்காட்டு மாவட்டத்தில்தான் ஏற்பட்டது. அவ் வட்டத்து மக்கள் இன்றும் அதைப் பேசிக்கொள்ளுவதுண்டு. உண்ண உணவின்மையாலும், உப்புக் கிடைக்காமையினாலும் குடிகள் வெறுங்காட்டுக் கீரைவகைகளை வேகவைத்துத் தின்றார்கள் என்றும், சிலர் களிமண் உருண்டைகளையும் தின்று உயிர் துறந்தார்கள் என்றும் அம் மாவட்டத்தில் செய்திகள் இன்றும் நடமாடுகின்றன. அரசினர் பஞ்ச நிவாரண வேலைகளை மும்முரமாக எடுத்துச் செய்தார்கள். பல செல்வந்தர்கள் ஏழை மக்களுக்கு நாடோறும் ஆயிரக்கணக்கில் உணவளித்து வந்தார்கள். சென்னையிலும், வடஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலும் கஞ்சித் தொட்டிகள் நடத்தப்பட்டன. பஞ்ச நிவாரணப் பணிகளுள் ஒன்றாகப் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது. குடிமக்கள் ஆயிரக் கணக்கில் குடிபெயர்ந்து அலையலானார்கள். சித்திரவதை கிராமங்களில் வரி கொடுக்க முடியாதவர்களை வரி தண்டும் அதிகாரிகளுள் சிலர் சித்திரவதை செய்தனர். சிலரைத் தொழுக்கட்டையில் மாட்டி வாட்டுவார்கள். சிலருக்கு அண்ணாந்தாள் போடுவார்கள். ஒரு பலகையில் தலையும் கைகளும் மட்டும் நுழையுமாறு தொளைகள் செய்து அதில் வரிகொடாதவரை மாட்டி வைத்துவிடுவதற்குத் தொழுக்கட்டை மாட்டுதல் என்று பொருள். அண்ணாந்தாள் என்ற தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் குனிந்து நிற்பார்கள். அவர்களுடைய கைகள் கால்களுடன் சேர்த்துக் கட்டப்படும்; முதுகின்மேல் பாறாங்கல் ஒன்று ஏற்றப்படும். இக் கோலத்தில் அவர்கள் வேகும் வெயிலில் நிறுத்தப்படுவர். மேலும், வரி கொடாதவர்களுக்குக் கசையடிகள் கொடுப்பதுமுண்டு. சென்னை அரசாங்கத்துக்கு இச் சித்திரவதைகளைப்பற்றி ஏராளமான முறையீடுகள் வந்தன. அரசாங்கம் சித்திரவதை விசாரணைக் குழு (1854) ஒன்று அமைத்தது. அதன் பரிந்துரைகளின் பயனாய்க் கிராம அதிகாரிகளிடமிருந்து வரிகொடாக் குற்றத்துக்குத் தண்டனையளிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டது. |