பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 541

பற்றியும் பாடிய பாடல்கள் எண்ணிறந்தன. அவரது பாடல்களில் எளிமையும்,
இனிமையும் காந்திய மணமும் ஒருங்கே கமழும். ‘அவளும் அவனும்’,
‘மலைக்கள்ளன்’ போன்ற நாவல்களையும் அவர் இயற்றியுள்ளார்.
திருக்குறளுக்குப் புதிய முறையில் அவர் ஓர் உரை செய்துள்ளார்.

     கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் தெள்ளத் தெளிந்த
தமிழில் எளிய சிறுசிறு பாட்டுகள் பாடியவர். குழந்தைகளுக்கெனக் கொஞ்சு
மொழியில் இவர் பல பாட்டுகள் இயற்றியுள்ளார். சர் எட்வின் ஆர்னால்டு
என்ற ஆங்கிலேயக் கவிஞர் புத்தரைப்பற்றி ஆங்கிலத்தில் இயற்றிய ‘ஆசிய
ஜோதி’ என்னும் நூலையும், பாரசீக மொழியில் உமார்கய்யாம் என்பார் பாடிய
‘ருபாயத்’ என்னும் நூலையும் தேசிகவிநாயகம் பிள்ளை தமிழில் செய்யுள்
வடிவில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றை மொழிபெயர்ப்புகள் என்றே
கூறமுடியாது; பிற மொழிக் கவிதைகளின் தழுவல் என்றும் கூறமுடியாது.
இலக்கிய நயம், பொருளாழம், பா நலம் ஆகியவை, இவருடைய கவிதைகளில்
ஒருங்கே பொலிவுறுகின்றன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும், நாமக்கல்
இராமலிங்கம் பிள்ளையும் பாரதியாருடன் ஒரு நிலையில் ஒப்பிடப்பட்டுச்
சிறந்த தேசியக் கவிஞர்களாகக் கருதப்படுபவர்களாவர்.

     தமிழ் இலக்கிய உலகில் மாபெரும் புரட்சியை விளைவித்தவர்
பாரதிதாசன் ஆவார். இவருடைய பாடல்களில் விழுமிய, முழுமையான,
பண்ணார்ந்த தமிழ்ச் சொற்கள் கோக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.
பெண்ணலன்களைப் பற்றியும், காதற் சிறப்பைப் பற்றியும் இனிக்க இனிக்கப்
பாடியவர் பாரதிதாசன். தமிழ்ச் சமுதாயத்தில், நூற்றுக்கணக்கான சிறு
தெய்வங்கள், எண்ணற்ற கண்மூடிப் பழக்கங்கள், பொருளற்ற மரபுகள் மலிந்து
கிடப்பதைப் பாரதிதாசன் வன்மையாகக் கடிந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் பாடிய காவியம் ஒன்று திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இவருடைய
பாட்டுகளுள் பல திரைப்பட இசையில் முழங்கி வருகின்றன.

     பொதுமக்களும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளும்
அளவுக்குச் சங்க நூல்களுக்கு உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப்
பிள்ளையும், பொ.வே. சோமசுந்தரனாரும் உரைகள் எழுதியுள்ளனர்.