பக்கம் எண் :

542தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     மறைமலையடிகளாருக்குப்பின் தனித்தமிழ் வளர்ப்பதில் முனைந்து
நின்றவர் ஞா.தேவநேயப் பாவாணர். இவர் கட்டுரை, உரைநூல், ஆராய்ச்சி
நூல், மொழியியல் நூல்கள் பல எழுதித் தமிழ்ப் பணி புரிந்துள்ளார். ‘மொழிப்
பேரறிஞர்’ எனப் பலராலும் போற்றப்படும் இவரால் ஆக்கப்பட்டுள்ள
‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’யை வெளியிடுவதில் தமிழக அரசு
முனைந்துள்ளது.

     தமிழ்நாட்டின் ஆட்சிமொழயாகத் தமிழ் திகழ்வதால் அலுவலகங்களில்
குறிப்புகளும் வரைவுகளும் தமிழில் எழுதப்பட ஊக்கம் அளிக்கப்பட்டு
வருகின்றது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் கலைக்களஞ்சியம் பத்துத்
தொகுதிகளும், குழந்தைகள் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளும்
வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்த் தட்டச்சு, தமிழ்ச் சுருக்கெழுத்தின் தேவை
வளர்ந்து வருவதால் தமிழ்த் தட்டச்சுப் பொறிகளும், தமிழ்ச் சுருக்கெழுத்து
நூல்களும் வெளிவர ஊக்குவிக்கப் படுகின்றன. ஆங்கிலத்துக்கு
அடுத்தபடியாக இந்திய மொழிகளுள்ளே முதன்முதலாகத் தமிழ்ச்
சுருக்கெழுத்து அகராதி ஒன்று அரசால் வெளியிடப் பட்டுள்ளது.

     நீதிமன்றங்களில் தீர்ப்புகளைத் தமிழில் வழங்கும் முறை நடைமுறைக்கு
வந்து கொண்டிருக்கிறது. பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைத்
தமிழில் மொழிபெயர்த்தும், தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில்
மொழிபெயர்த்தும் வெளியிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     எல்லாத் துறைகளிலும் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான
முனைப்புத் திட்டம் ஒன்றை தமிழ் வளர்ச்சி இயக்கம் வகுத்துச் செயல்பட்டு
வருகின்றது. ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்னும் அரசின் குறிக்கோள்
விரைவில் நிறைவேறலாம்.

நாவல்கள்

     இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாவல்கள் வெளிவந்தன.
ஆரணி குப்புசாமி முதலியார் என்பவர் ‘ரெயினால்ட்ஸ்’ என்ற ஆங்கில
ஆசிரியர் எழுதிய பல நாவல்களைத் தழுவித் தமிழ் நாவல்கள் பல எழுதி
வெளியிட்டார். அவற்றுள் சில ‘ஆனந்த போதினி’ என்ற திங்கள் ஏட்டில்
தொடர்ந்து வெளிவந்தன. இவருடைய எழுத்து நடை விறுவிறுப்பும் துரிதமும்
வாய்ந்தது. கதையின் போக்கில்