இடையிடையே மேனாட்டு நாகரிகத்தை எள்ளி நகையாடித் தம் சொந்தக் கருத்துகளை நுழைத்துவிடும் வழக்கம் இவருக்கு உண்டு. பல துப்பறியும் நாவல்களையும் வேதாந்த நூல்களையும் குப்புசாமி முதலியார் எழுதியுள்ளார். ஜே.ஆர். ரங்கராஜு என்ற நாவலாசிரியர் துப்பறியும் ஐந்து நாவல்கள் வெளியிட்டார். மக்கள் அவற்றை வெகு ஆவலுடன் படித்து வந்தனர். முதன்முதலில் மொழிபெயர்ப்போ, பிறமொழி நூல்களைத் தழுவியனவோ அல்லாமல் சொந்தமாக நூல் எழுதியவர் இவர். இவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் சமூகத்தை அரித்துக் கொண்டிருந்த பல தீய பழக்கவழக்கங்களை அகற்றுவதற்கென்றே எழுதப்பட்டன. வரதட்சிணையின் கொடுமையை இராசேந்திரன் என்னும் நாவல் எடுத்துக் காட்டுகின்றது. சில மடாதிபதிகள் துறவு பூண்டு, காவியுடுத்துச் சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபடுவதாகக் கற்பனை செய்து எழுதப்பட்டது சந்திரகாந்தா என்னும் நாவல். ரங்கராஜு வின் நாவல்கள் நாடக மேடைகளிலும், திரைப்படம் மூலமாகவும் மக்கள் பாராட்டைப் பெரிதும் பெற்றன. சந்திரகாந்தா என்னும் நாவல் அக்காலத்திய மடங்களின் நடைமுறைகளில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்தது என்பர். இவர் எழுதிய நாவல்கள் அனைத்திலும் தோன்றி, படிப்பாரின் பாராட்டைப் பெற்றவரான துப்பறியும் கோவிந்தன் என்பார் தமிழ் இலக்கியப் படைப்புகளில் தனியிடம் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வரை புதிய புதிய நாவல்களை எழுதி வாழ்ந்தவர்கள் வடுவூர் துரைசாமி ஐயங்காரும், கோதைநாயகி அம்மாளும் ஆவர். ஆங்கில மொழியில் பல புனைகதைகளைப் படித்து இன்புற்று அத்தகைய நூல்கள் தமிழில் எழாததற்கு வருந்தி நின்ற மக்களின் ஏக்கத்தைப் போக்கியவர்கள் இவர்கள். ஐயங்கார் நாவல்கள் சில திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவருடைய நடை சொல்வளம் செறிந்தது; ஓட்டமுள்ளது. கதையின் போக்கில் திடீர்த் திருப்பங்களை அமைத்தல் இவர் பெற்றிருந்த தனிச் சிறப்பாகும். பண்டைய தமிழ் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டு கற்பனைக் கதைகள் புனைந்து பல்லவ, சோழ குலத்து முடி மன்னர்கள் கால்வெள்ளத்தைக் கடந்து வந்து, நம் கண் முன்பு அவர்களை நிறுத்தி வைத்த இலக்கியச் சித்தர் ரா. கிருஷ்ணமூர்த்தியாவார். ‘கல்கி என்னும் புனைபெயரில் இவர் பல கதைகள் எழுதி வெளியிட்டார். ‘ஆனந்தவிகடன்’ என்னும் |