வார ஏட்டில் பல நாவல்கள் எழுதி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர் ‘தேவன்’ என்பவர். வழக்கமாக வந்த தமிழ்நடை மரபையே மாற்றித் தமக்கெனத் தனியொரு நடையை அமைத்துக்கொண்டு ‘புதுமைப்பித்தன்’ என்னும் புனைபெயரில் விருத்தாசலம் என்பார் பல சிறுகதைகள் வெளியிட்டார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முடிபோன்று விளங்குவது இவருடைய இலக்கியம். தமிழில் கற்பனைக் கதைகள் பல எழுதி இளைஞர் சமுதாயத்தின் உள்ளங்களைக் கவர்ந்த நாவலாசிரியருள் தலைசிறந்து விளங்குபவர், மு. வரதராசனார் ஆவார். இவருடைய நாவல்களில் இலக்கிய வளர்ச்சியை மட்டுமன்றிச் சமூகச் சீர்திருத்த நோக்கத்தையும் காணலாம். இவர் திருக்குறள் ஆராய்ச்சி ஒன்றையும், மொழி வரலாறு ஒன்றையும் எழுதியுள்ளார். திருக்குறள் கருத்துகளையும் மக்கள் வாழ்க்கையையும் இயைபு படுத்திச் செய்யப்பட்டுள்ள இவருடைய திருக்குறள் ஆய்வு நூல் தமிழ் ஆராய்ச்சித்துறையில் புதியதொரு முறையைத் தொடங்கி வைத்துள்ளது. நாவலாசிரியருள் அகிலன் பெரும் திறமை வாய்ந்தவர். தமிழில் எழுத்து நடையிலும், கற்பனைத் திறத்திலும், பல பெரும் ஆசிரியர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். பலர் விஞ்ஞானம், வரலாறு, சுற்றுப் பயணம் ஆகிய துறைகளில் நூல்கள் எழுதித் தமிழ் இலக்கியத்துக்கு வளமூட்டி வருகின்றனர். மற்றும் பலர் ஐரோப்பிய மொழிகளினின்றும் வட இந்திய மொழிகளினின்றும் சில சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். சிலர் தமிழ் இலக்கியப் புராணக் காட்சிகளைக் கட்டுரைகளாக வடித்தும், சொற்பொழிவுகளாக வழங்கியும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்து வருகின்றனர். நாடகம் சங்ககாலக் கூத்துகள், சோழர் காலத்து நாடகங்கள் ஆகியவை விசயநகர மன்னர்களின் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டன. விசயநகர ஆட்சியிலும், மதுரை நாயக்கர்கள் ஆட்சியிலும் தெலுங்கு மொழிக்குச் செல்வாக்கு ஏறியிருந்தது. அதனால் தெலுங்குப் பாடல்களும், தெலுங்குக் கூத்துகளும் தமிழ்நாட்டில் இடம்பிடித்தன. பெரும்பாலும் தமிழில் பரதக் கூத்துகளும், தெலுங்கில் பாகவதக் கூத்துகளும் நடைபெற்று வந்தன. ஆண்கள் பெண்வேடங் கட்டிக்கொண்டு |