நடிப்பார்கள். நாடகம் இரவு முழுதும் நடைபெறும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கன்னையா, நாராயணசாமிப் பிள்ளை, சீனிவாசப்பிள்ளை, ஆஞ்சநேயர் கோவிந்தசாமிப் பிள்ளை முதலியவர்கள் நாடக அரங்குகள் அமைத்து, ஓவியம் தீட்டப்பெற்ற திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தம் நாடகங்களை மேடையேற்றினார்கள். நாடக அரங்குகள் அமைப்பதில் ஓவியக்கலை, மின்விளக்குகளைக் கொண்ட ஒளியமைப்பு, காட்சிப் புனைவுகள் ஆகீயவற்றைக் கையாண்டு நாடகம் நடத்துவதில் இவர்கள் புதிய முறைகளைக் கையாண்டார்கள். கண்ணைக் கவரும் விலையுயர்ந்த ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், வண்ண மலர்கள், நொடியில் மாறக்கூடிய காட்சிச் சோடனைகள் ஆகியவை இவர்களுடைய நாடகங்களின் சிறப்பாகும். ஆண்களே பெண் வேடங்களை ஏற்று நடித்து வந்தனர். தெருக்கூத்துகளில் இசைக்கப்பட்ட முகவீணையும், முழவமும் கைவிடப்பட்டன. இந் நாடக மேடைகளில் ஆர்மோனியமும் மத்தளம் அல்லது தபேலாவும் பக்க மேளங்களாகப் பயன்படலாயின. நடிகர்கள் பல இசைகளில் பாடல்களைப் பாடினார்கள். உரைநடையைவிட்டுப் பாட்டுகளையே மக்கள் பெரிதும் விரும்பினர். முழு இராமாயணம், முழுபாரதம், இதர புராணக் கதைகள், இராமானுசர் வரலாறு, பகவத்கீதை உபதேசம், நந்தனார் கதை முதலியவை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இசைபாட வல்லவர்களே நடிகராக வெற்றி பெறமுடியும். பிறகு சிறுவர்களைக் கொண்ட நாடகக் குழுக்கள் பல அமைக்கப் பட்டன. அவற்றுள் நடித்துவந்த சில சிறுவர்கள் பிற்காலத்தில் மிகச் சிறந்த மேடை நடிகர்களாகவும் திரைப்பட நடிகர்களாகவும் புகழ்பெற்று விளங்கியுள்ளார்கள். சங்கரதாச சுவாமிகள் நாடகக் கலையின் தந்தையெனப் போற்றப்படுகின்றார். பம்மல் சம்பந்த முதலியார் பல நாடகங்களைத் தமிழில் எழுதினார். அவற்றுள் பல ஆங்கில நாடகங்களைத் தழுவி எழுதப் பெற்றவை. அவர் காலத்து நடிக்கப்பட்டுவந்த நாடகங்களில் காணப்பட்ட மிதமிஞ்சிய சோக மெய்ப்பாட்டைக் குறைத்தும், உவகை, காதல், வீரம் போன்ற மெய்ப்பாடுகளை மிகுதியாகச் சேர்த்தும், தம் நாடகங்களுக்குப் புதியதொரு வடிவத்தைச் சம்பந்த முதலியார் அமைத்துக் கொடுத்தார். மாணவர்கள், பொழுதுபோக்குக் கழகங்களின் உறுப்பினர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவருமே ஒரு மூன்று மணிநேரம் நடித்துக் காட்டுமளவுக்கு இவருடைய நாடகங்கள் அமைந்திருந்தன. சம்பந்த முதலியாரின் முயற்சியினால் |