பக்கம் எண் :

550தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பழக்கத்தில் இருந்துவந்தது. காலப்போக்கில் அது கோலெழுத்தாக மாறி, பிறகு
அறவே வழக்கொழிந்துவிட்டது. மலையாள மொழியில் வடமொழிக் கலப்பு
ஏற்பட்டு அது ஒரு தனிமொழியாக வளர்ந்து வந்தபோது அதன் எழுத்துகள்
ஆரிய எழுத்துகள் என்ற பெயரை ஏற்றன.

     சோழரும் பாண்டியரும் மறைந்த பிறகு விசயநகர மன்னர்கள் பேரரசின்
காலத்தில் வடமொழி நாகரி எழுத்துகள் நடைமுறைக்கு வந்தன. அவர்களைத்
தொடர்ந்து மராத்தியரும் நாகரி எழுத்தையே வழக்கில் வைத்திருந்தனர்.
எனவே, கிரந்த எழுத்து வழக்கிறந்தது. தமிழ் எழுத்துகளில் வரிவடிவ
மாறுதல்கள் ஏதும் தோன்றவில்லை. அவ்வப்போது தேவைக் கேற்ப
அவற்றின் வரிவடிவங்களில் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
வீரமாமுனிவர் எகர ஒகரத்தில் குறில் நெடில் வேறுபாடு தோன்ற மாற்றஞ்
செய்தார். பின்னர்ப் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது (1978), பெரியார்
பின்பற்றியவாறு சில எழுத்துகளின் வரிவடிவத்தில் சில மாற்றங்கள் (ணா, றா,
னா, ணை, லை, ளை, னை, ணொ, றொ, னொ, ணோ, றோ, னோ) செய்யப்
பெற்றன. தமிழ்மொழியில் எண்களும் தனிவடிவம் பெற்று விளங்குகின்றன.

அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி

     இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா,
ஹாலந்து, போர்ச்சுகல், செக்கோஸ்லோவேகியா, பின்லாந்து ஆகிய
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தமிழ் இலக்கியம், இலக்கணம்,
மொழியமைப்பு, எழுத்தின் வரிவடிவம் ஆகியவற்றில் மிகச் சிறப்பான
ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும்
அந்நாடுகளில் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகத்
தாம் பதவி ஏற்றவுடனே சி.என். அண்ணாதுரையவர்கள் இரண்டாம் உலகத்
தமிழ் நாட்டைச் சென்னையில் 1968-ல் கூட்டுவித்தார். தமிழின்
வளர்ச்சியையும், தமிழரின் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றையும் உலக மக்கள்
உணர்ந்து ஆய்வதற்கு மேவிய சீரிய வாய்ப்புகளை இம் மாநாடு
நிறுவிக்கொடுத்தது.

     ஒரு நாட்டின் நாகரிகமும், பண்பாடும், ஒரு காலத்தில் தோன்றி
அழிந்துவிடுவனவல்ல. அவை மக்களின் வாழ்க்கையுடன் இயைந்து
விடுகின்றன. அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களையும் அவை ஏற்று வருவது
உண்டு. எனினும், அவர்களுடைய வாழ்வில் ஊடுருவிச் செல்லும் அவற்றின்
பண்டைய மரபும் இயல்பும் எக் காலத்தும் மாறாமல் விளங்கி வருவனவாம்.