பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 549

பாண்டியநாடானது சோழரின் ஆட்சிக்கு உட்பட்ட பிறகு அங்கும் சோழரின்
கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளே வழக்கத்துக்கு வந்தன. சோழரின்
செல்வாக்கு உச்ச நிலையை எட்டிய பாண்டியர் காலத்திலும், மைசூரின் சில
பகுதிகளிலும், நெல்லூர் மாவட்டத்திலும், ஈழ நாட்டிலும், கிழக்கிந்தியத்
தீவுகளிலும் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. விசாகப்பட்டினம்,
பூரி ஆகிய இடங்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

     தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சியானது
நீண்டகாலமாகவே தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. தமிழ் நெடுங்கணக்கு,
மொகஞ்சதாரோ எழுத்துகள் ஆகியவற்றுக்கிடையிட்ட தொடர்பும், தமிழ்
எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடையிட்ட தொடர்பும், தமிழ்
எழுத்துகட்கும் கிரந்த எழுத்துகட்கும் இடையிட்ட தொடர்பும் விரிவாக
ஆயப்பட்டு வருகின்றன. தொல்காப்பியனாரின் காலத்து எழுத்து
வரிவடிவங்கள் யாவை, அவை பிராமி வடிவமா அன்றி வேறானவையா
என்னும் கேள்விகள் ஆய்வாளரின் சிந்தனையைத் தூண்டி வருகின்றன.
தொல்காப்பியர் காலத்து எழுத்தின் வரிவடிவங்கள் இன்னவென இன்று அறிய
முடியவில்லை. சில எழுத்துகளின் வரி வடிவ அமைப்புகளைப்பற்றி மட்டும்
அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பண்டைய
கல்வெட்டுகள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை பிராமி
எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, பிராமி எழுத்தானது பண்டைய
தமிழ் எழுத்து வரிவடிவத்தையே ஏற்றிருந்து பிறகு பிராகிருத எழுத்தாக
மாறியிருக்க வேண்டும். அல்லது பிராமிக்கு முற்பட்ட தமிழ் எழுத்தின்
வரிவடிவம் ஒன்று வழக்கிலிருந்து மறைந்து போயிக்கவேண்டும். இவை
வெறும் ஊகங்களேயாம். ஒரு காலத்தில் நாடு முழுவதிலும் பிராமி
எழுத்துத்தான் திராவிட மொழிகள் அனைத்தினுக்கும் ஆதி எழுத்தாகப்
பயன்பட்டு வந்தது; காலப்போக்கில் அது திரண்டு உருண்டு வட்டெழுத்தாக
வடிவமைந்து, கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வழக்கில்
இருந்து வந்தது. பல்லவநாட்டைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டபின்
சோழப் பேரரசர்கள் தமிழ் எழுத்தையும் கிரந்த எழுத்தையும் இணைத்துக்
கல்வெட்டுகளில் பொறித்து வந்தனர். சோழர்கள் பாண்டிநாட்டைக்
கைக்கொண்ட பிறகு அங்கு வழங்கி வந்த வட்டெழுத்துகள் மறைந்து சோழ
நாட்டில் வழங்கி வந்த வரிவடிவமே அங்கும் வழக்குக்கு வந்தது. சோழ
மன்னரின் ஆட்சிக்குப் புறம்பாக இருந்த மலைநாட்டில் இவ்
வட்டெழுத்தானது தொடர்ந்து