பக்கம் எண் :

548தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் மக்கள் தம் தாய்மொழியிலேயே
பாடிப் பரவுவதற்குத் தடைகள் இருந்துவருகின்றன. சோழர் பாண்டியர்
காலத்தில் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஏனைய திருமுறைப்
பாடல்கள் ஆகியவை முழங்கி வந்தன. அம் மரபு இன்று மறைந்துபோயிற்று.
அண்மையில் தமிழ்நாட்டு அரசின் ஆணையின்கீழ்க் கோயில்களில் தமிழிலும்
வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

     தமிழ் வளர்ச்சியில் செய்தித்தாள்கள் பலவும் ஈடுபட்டு வந்துள்ளன.
நூறு ஆண்டுகளுக்குமேல் ‘சுதேசமித்திரன்’ என்னும் நாளேடு தமிழில்
செய்திகளைப் பரப்பி வந்துள்ளது. இச் செய்தித்தாளும், மற்றொரு தமிழ்
நாளேடான ‘தினமணி’யும் மணிப்பிரவாளம் போன்ற கலப்புத் தமிழையே
பயன்படுத்தி வந்துள்ளன. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில்,
தென்மொழி முதலிய இதழ்கள் நல்ல தமிழில் கட்டுரைகளை வெளியிட்டு
வருகின்றன. ஆனந்தபோதினி, ஆனந்த விகடன், கல்கி முதலிய வார ஏடுகள்
சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் வளர்ச்சிக்குப்
புரிந்துவந்துள்ள பணிகளை அளந்து மதிப்பிடுதல் எளிதன்று. தமிழில்
புதியதொரு காலத்தையே அவை தொடங்கியுள்ளன. தமிழருக்கு நகைச்சுவை
பயிற்றுவித்தது ஆனந்த விகடனாகும். அவ்வேடானது தமிழ் இலக்கியத்தில்
நகைச்சுவை ஓவியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் இசை,
ஓவியம், இலக்கியம் ஆகிய துறைகளில் புரட்சியான மாறுபாடுகள் பலவற்றைத்
தோற்றுவித்தது. ஆனந்த விகடன் மூலமாகவும், கல்கியின் மூலமாகவும்
வரலாற்று நாவல்கள் பல வெளிவந்தன.

தமிழ் எழுத்துகள்

     சென்ற நூற்றாண்டுக்கால அளவில் தமிழ் எழுத்தின் வரி வடிவில் பல
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் இன்ன வரிவடிவையுடைய
எழுத்துகளைக்கொண்டு எழுதப்பட்டன என்று அறிந்துகொள்ளுவதற்குச்
சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட
கல்வெட்டுச் சாசனங்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் நமக்குக் கிடைத்து
வருகின்றன. பதினோராம் நூற்றாண்டு வரையில் இச் சாசனங்களில்
கையாளப்பட்டுள்ள எழுத்துகளின் வரி வடிவமானது தொண்டை மண்டலம்,
சோழ மண்டலம், கொங்கு நாடு ஆகிய பகுதிகளிற்றான் காணப்படுகின்றன.
ஆனால், தென்பாண்டி நாட்டில் தமிழ் வட்டெழுத்துகளால் சாசனங்கள்
பொறிக்கப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்குள்