பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 547

மீண்டும் உயர்ந்த நிலையில் வளர்ந்து உலகை மகிழ்விக்கும் அளவுக்குப்
பேரும் புகழும் அடைந்துள்ளது. இவ் வளர்ச்சிக்குத் திரைப்படக்கலை ஓரளவு
தூண்டுகோலாகச் செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இசை

     விசயநகரப் பேரரசர்கள், நாயக்கர்கள் காலத்தில் தெலுங்கு மொழி
ஏற்றம் பெற்று வந்ததாகையால், தமிழ்ப் பண்களும் தமிழ்ப் பாட்டுகளும்
வழக்கிறந்து மறைந்துபோயின. தமிழ்க் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சியும்
தெலுங்கிலேயே கொடுக்கப்படுகின்றது. அவர்களுக்குத் தெலுங்கில்
சுவரம், ஜண்டவரிசை, அலங்காரம், வர்ணம், கீர்த்தனைகள் ஆகியவை
கற்பிக்கப்பட்டு வருகின்றன. பொருள் உணராமலேயே தமிழர்கள் தெலுங்குப்
பாடல்களை மேடைகளில் பாடிவந்தனர். தமிழ்ப்பற்று இல்லாதவர்களான
ஒருசிலர் இசைக்கு மொழி என்னும் பேதம் கிடையாது எனவும், இசை
‘நாதபிரம்மம்’ எனவும், தத்துவங்கள் பேசித் தமிழிசையை ஒதுக்கியே வந்தனர்.
தமிழ்நாட்டில் நடைபெறும் இசையரங்குகளில் இன்றளவும் பாட்டுகள்
அனைத்தும் தெலுங்கிலும், கன்னடத்திலும், வடமொழியிலும் பாடப்படுகின்றன.
பாடுபவர்கள் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்களைக் கச்சேரியின் முடிவில் ஓர்
ஐந்து நிமிடங்கள் பாடுவர். அப் பாட்டுகள் பெரும்பாலும் திருப்புகழ்ப்
பாடலாகவோ அன்றிப் பாரதியாரின் பாடலாகவோ இருக்கும். இந்
நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப்
பாடல்களைப் பாடினார். மாம்பழக் கவிராயர் போன்றவர்கள் கீர்த்தனைகள்
பாடினர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்னும் நூலும்,
விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் என்னும் நூலும் எழுதி இசைத் தமிழுக்கு
ஏற்றம் தந்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத்
தலைவராக இருந்த பி. சாம்பமூர்த்தி இசைக்கலைக்குப் பெரிதும்
பாடுபட்டுள்ளார். தமிழ்மொழிக்கு ஏற்பட்டிருந்த தாழ்வை நீக்கி அதற்குச்
சிறப்புச் செய்வதற்காக ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை
இயக்கம் ஒன்றைத் தொடங்கி வைத்தார் (1940). அவருடைய அரிய தொண்டு
நற்பயன் அளித்து வருகின்றது. ஆண்டுதோறும் தமிழிசை மாநாடு ஒன்று
கூடித் தமிழ்ப் பண் ஆராய்ச்சி நடத்தி வருகின்றது. தமிழ்ப் பாடல்கள்,
இசைக் கச்சேரிகளிலும் வானொலியிலும் இடம்பெற்று வருகின்றன.
தமிழிசையைப் பரப்புவதில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.
சுந்தரேசனார் ஆற்றியுள்ள பணி போற்றத்தக்கது.