பக்கம் எண் :

58தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அதனால் ரோமர்கள் அவ்விடங்களை நாடவில்லை போலும். பெரிபுளூஸ்
ஆசிரியர் கண்ணனூரைப்பற்றியும், தொண்டியைப் பற்றியும் தம் நூலில்
குறிப்பேதும் கொடுக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமாகும். நீரோவுக்குப்
பிறகு சிறிது காலம் ரோமர்கள் இந்தியச் சரக்குகளைப் பண்டமாற்று முறையில்
கொள்முதல் செய்து வந்தனர் என அறிகின்றோம்.

     பண்டைய தமிழர்கள் மத்தியதரைக் கடல் நாடுகளுக்குத் தம்
சரக்குகளைத் தாமே நேர்முகமாக ஏற்றிச் செல்லுவதில்லை. மாமன்னன்
அலெக்சாண்டர் (கி.மு. 356-323) காலத்துக்கு முன்பு தமிழகத்து வணிகர்கள்
பாபிலோனியாவைக் கடந்து அப்பால் சென்றதாகத் தெரியவில்லை ;
செங்கடலிலும் அவர்கள் நுழையவில்லை. இவர்கள் செங்கடல்வரையில் ஏற்றிச்
சென்ற சரக்குகளைப் பினீஷியரும் கால்டேயரும் ஏற்றுக்கொண்டு
மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு அவற்றை எடுத்துச் சென்று விலையாக்கினர்.
பிறகு கிரேக்கர்களும் எகிப்தியரும் இக்கடமையை மேற்கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில்
அராபியரும் ரோமரும் தமிழகத்துப் பண்டங்களை மேலை நாடுகளுக்குக்
கப்பலேற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தியர் செங்கடலைக்
கடந்து நெடுந்தொலைவு கலமோட்டிச் செல்லவில்லை என்ற ஒரு
காரணத்தினாலேயே அவர்களுக்குக் கடலோடும் ஆற்றல் நிறைந்திருக்க
வில்லை என்று கொள்ளலாகாது. ஏனெனில், நைல் நதியின் துறைமுகப்
பட்டினமான அலெக்சாண்டிரியாவில் நூற்றுக் கணக்கில் இந்தியர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் அம் மாநகரில் கூட்டங் கூட்டமாகக் கூடித் தம்
சரக்குகளை விற்பனை செய்து வந்தார்கள்.

     நடுக்கடலில் தமிழர்கள் கலமோட்டிச் செல்லாவிடினும், அவர்கள்
கரையோரமாகவே தோணிகளை ஓட்டிச் சென்று வாணிகம் செய்தனர். இத்
தோணிகள் யாவும் தனித்தனி மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்
பெற்றவை. ஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே மிகப் பெரிய
கப்பல்களைக் கட்டக்கூடிய ஆற்றலையும், நுண்ணறிவையும் தமிழர்
பெற்றுவிட்டனர். இக் கப்பல்கள் ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று டன் எடைச்
சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடியவை. பிற்காலத்தில் சோழ மன்னர்கள்
காலத்தில் இவற்றைவிடப் பெரிய கலங்களும் கட்டப்பெற்றன. சோழ
மண்டலக் கடற்கரையில் புதுவை, மரக்காணம் முதலிய துறைமுகங்களில்
மாபெருங் கப்பல்களும், பெரிய கட்டுமரங்களும் வந்து தங்குவதுண்டு.