அதனால் மூண்ட அரசியல் குழப்பத்தினாலும் ரோமர்கள் நவமணிகளையும், நுண்ணாடைகளையும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்துகொள்ளுவது குன்றிவரலாயிற்று. நீரோவை யடுத்து வெஸ்பேஸியன் ரோமாபுரியின் பேரரசனாக அரியணை ஏறினான். தன்னைச் சுற்றியிருந்த பிரபுக்களின் செல்வச் செருக்கையும், வாழ்க்கை ஆடம்பரங்களையும் அவன் வெறுத்தான். அப் பிரபுக்களின் அளவுக்கு மீறிய இன்ப வாழ்க்கையை ஒடுக்கும் நோக்கத்துடன் பல சட்டங்களை இயற்றினான்; தன் முயற்சிகளும் நிறைவேறக் கண்டான். ரோமாபுரிக் குடிமக்கள் மீண்டும் எளிய வாழ்க்கையில் ஈடுபடலானார்கள். வெஸ்பேஸியன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக ரோமர்கள் தமிழகத்துடன் வைத்துக்கொண்டிருந்த வாணிகத் தொடர்பும் சுருங்கிவரத் தொடங்கிற்று. ரோமாபுரியில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. இந்த ஒரு காரணத்தைக் கொண்டு ரோம வாணிகம் அறவே அற்றுவிட்டது என்று கொள்ளுவதற்கில்லை. ஏனெனில், தமிழகத்து மிளகும் துணி வகைகளும் ரோமாபுரிக்குத் தொடர்ந்து ஏற்றுமதியாகிக் கொண்டே இருந்தன. விசிகாத்து மன்னன் கி.பி. 410-ல் ரோமாபுரியைக் கைப்பற்றினான். அந்நகரத்துக் குடிமக்களின்மீது தண்டம் ஒன்று விதித்தான். ரோமர்கள் மூவாயிரம் பவுண்டு மிளகு தனக்குத் திறை செலுத்த வேண்டும் என்றும், தவறினால் தான் ரோமாபுரியை அழித்துவிடப் போவதாகவும் மருட்டினான். ரோமர்கள் தம் நகரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அம் மன்னன் கேட்ட அவ்வளவு மிளகையும் செலுத்தித் தம் நகரை மீட்டுக்கொண்டார்களாம். தமிழகத்துப் பண்டங்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் ரோமாபுரிக்குத் தொடர்ந்து ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது என்ற செய்தியை இவ் வரலாறு உறுதி செய்கின்றது. பேரரசன் கான்ஸ்டன்டைன் காலத்திலிருந்து (கி.பி. 324-337) தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் மீண்டும் ரோம நாணயங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை 4,5ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கவேண்டும். பேரரசன் கான்ஸ்டன்டைன் தன் ஆயுள்நாளின் இறுதியில் இந்தியத் தூதுவர் ஒருவரைத் தன் அரசவைக்கு வரவேற்றான் என்று ரோமாபுரி வரலாறு கூறுகின்றது. பேரரசன் ஜூலியனும் (கி.பி. 36-63) இந்தியாவினின்றும் பல தூதுவர்களை வரவேற்றுள்ளான். கொங்கணக் கடற்கரையோரத்திலும், வடமலையாளக் கடற்கரை யோரத்திலும் கடற்கொள்ளைக்காரர்கள் மலிந்திருந்தனர். |