ரோமாபுரி நாவாய்கள் அங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சின. ரோமர்கள் மட்டுமன்றிக் கிரேக்கரும், சிரியரும், யூதரும் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பை வளர்த்துக் கொள்ளலானார்கள். தமிழகத்தில் ரோமாபுரி மக்கள் குடியேறி வாழ்ந்துவந்த இடங்களிலெல்லாம் அவர்களும் இணைந்து வாழலானார்கள். அவர்களுள் பலர் தமிழகத்திலேயே நீண்டகாலம் தங்கிவிட்டனர். அப்படித் தங்கியிருந்தவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார். வாணிகம் விரிவடைய விரிவடையத் தமிழ்நாட்டிலேயே குடியேறிவிட்ட ரோமாபுரியினரின் தொகையும் வளர்ந்து வந்தது. அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்திருந்ததாகத் தெரிகின்றது. அவர்கள் வழங்கி வந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது புதைபொருள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. ரோமர்கள் தமக்கள் தாமே செய்துகொண்ட வாணிகத்தில் இந் நாணயங்களைப் பயன்படுத்திக்கொண்டனர் போலும். மதுரையில் ரோம நாணய அச்சுச்சாலை ஒன்று நடைபெற்றிருக்க வேண்டுமென ஊகிக்க வேண்டியுள்ளது. அகஸ்டஸ் பேரரசனின் கோயில் ஒன்று வழிபாட்டில் இருந்து வந்ததாகப் பியூட்டிங்கரின் அட்டவணைகளிலிருந்து அறிகின்றோம். ரோமாபுரியினரின் வாணிகம் ஓங்கி நின்றபோது அரிக்கமேடு என்னும் இடத்தில் அவர்களுடைய பண்டசாலை யொன்றும், விற்பனைச்சாலை யொன்றும் நடைபெற்று வந்தன. மத்தியதரைக் கடல் நாடுகளில் மக்கள் கையாண்ட மட்பாண்டங்களைப் போன்ற கலங்கள் அரிக்கமேட்டிலும் கிடைத்துள்ளன. ரோமாபுரியில் இறக்குமதியான சரக்குகளின் அளவு ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே போயிற்று. அதனால், ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள ரோமாபுரித் தங்கம் தமிழரின் கைக்கு மாறிக்கொண்டே வந்தது. இவ்வளவு பெருந்தொகையில் தம் நாட்டுச் செல்வம் வடிந்து வருவதைக் கண்டு வெருவிய ரோமாபுரி மக்களில் சிலர், ‘தமிழகத்துடன் நடைபெற்றுவந்த வாணிகத்தையும் தமிழகத்துப் பண்டங்களின்மேல் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் வன்மையாகக் கண்டித்தனர். பேரரசன் நீரோ என்பவன் கி.பி. 68-ல் காலமானான். அவனுக்குப் பின் விளைந்த அரசுரிமைப் போட்டியினாலும், |