பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 55

பொதுகே என்றும், மரக்காணத்தைச் சோபட்மா என்றும், மசூலிப்பட்டினத்தை
மசோலியா என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. சேரநாட்டுத் துறைமுகங்கள்
அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்கு மிடையில் அமைந்திருந்தன.
அரேபியாவிலிருந்தும், கிரீஸிலிருந்தும் வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு
வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் செறிந்து கிடந்தனவென்று பெரிபுளூஸ்
கூறுகின்றது. வைகாசி மாதந் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் வரையில்
சேரநாட்டுக் கடற்கரையின்மேல் வந்து மோதும் தென்மேற்குப் பருவக்காற்றை
முதன்முதல் கண்டறிந்தவர் ஹிப்பாலஸ் (கி.பி. 45) என்ற கிரேக்கர் எனக்
கூறுவர். இக் காற்றோட்டத்தினூடே பாய்விரித்தோடுங் கப்பல்கள் வெகு
விரைவாகவும், கட்டுக் குலையாமலும் சேரநாட்டுத் துறைமுகங்களை
அடையமுடியும் என்ற உண்மையை ஐரோப்பிய மாலுமிகள்
அறிந்துகொண்டனர். இப் பருவக்காற்றின் துணைகொண்டு வாணிகச் சரக்குகள்
ஏற்றிய பெரிய பெரிய மரக்கலங்கள் கடல்களின் நடுவில் பாய்விரித்தோடித்
தமிழகத்தின் மேலைக்கரைத் துறைமுகங்களை யடைந்து நங்கூரம் பாய்ச்சின.
தென்மேற்குப் பருவகாற்றின் பயனைத் தெரிந்து கொள்ளும் முன்பு
வாணிகர்கள் சிறு சிறு படகுகளில் பண்டங்களை ஏற்றிக் கொண்டு
கரையோரமாகவே ஊர்ந்து வந்து நீண்ட நாள் கழித்துச் சேரநாட்டுத்
துறைமுகங்களை யடைவது வழக்கம். அந்தத் தொல்லை இப்போது ஒழிந்தது.
நெடுங்காலந் தாழ்ந்து போனால் பல பண்டங்கள் கெட்டுப்போம் என்ற
அச்சமும் கவலையும் அவர்களை விட்டுச் சுழன்றது.

     தமிழகத்துடன் ரோமர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம்
அவர்களுடைய பேரரசரின் ஆதரவின்கீழ்ச் செழிப்புடன் வளர்ந்து வந்தது.
இவ் வாணிகத்தின் வளர்ச்சியில் பேரரசர் அகஸ்டஸு ம் பேரூக்கங் காட்டினார்.
ஆர்மஸ் (Hormuz) துறைமுகத்திலிருந்து ஏறக்குறைய நூற்றிருபது
மரக்கலங்கள் பாய்விரித்தோடியதைத் தாம் நேரில் கண்டதாக ஸ்டிராபோ
கூறுகின்றார். பாண்டிய மன்னன் ஒருவன் தன் தூதுவர் இருவரைத் தன்
அரசவைக்கு அனுப்பி வைத்ததாக அகஸ்டஸ் என்ற ரோமாபுரிப் பேரரசரே
கூறுகின்றார். ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிகம்
காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின்
ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிகம் தமிழகத்தில் மட்டுமன்றி
மசூலிப்பட்டினத்திலும், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று.