பக்கம் எண் :

54தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

கி.பி. முதலாம் நூற்றாண்டுவரையில் ரோமரின் வாணிகம் பெருமளவு
விரிவடையவில்லை. இக் கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னரின்
நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது அ தற்கு
ஒரு சான்றாகும். ரோமாபுரிச் சக்கரவர்த்தி அகஸ்டஸ் என்பார் கி.மு. 30-ல்
எகிப்தை வென்று அதன்மேல் தம் ஆட்சியை நிலைநாட்டினார். இவ் வெற்றி
எதிர்பாரத ஒரு நலனையும் அவருக்குப் பயந்தது. இதனால் அவருக்குத்
தமிழகத்துடன் நேர்முக வாணிகத் தொடர்பு கிட்டியது. கிறித்தவ ஆண்டு
தொடங்கிய பிறகு முதல் சில நூற்றாண்டுகளில் தமிழகத்துக்கும்
ரோமாபுரிக்கும் இடையே கடல் வாணிகம் பெருமளவுக்கு வளர்ந்து
வரலாயிற்று. இதற்குப் பல சான்றுகள் உள. ரோமாபுரிச் சக்கரவர்த்தி
அகஸ்டஸின் உடன்காலத்தவர், ஸ்டிராபோ (Strabo) என்ற நூலாசிரியர்.
இவர் பூகோள நூல் ஒன்றை எழுதியுள்ளார். ‘எரித்திரியக் கடலின்
பெரிபுளூஸ்’ ( Periplus of the Erithraean Sea) என்று அழைக்கப்படும்
வேறொரு வரலாற்று நூலும் (கி.பி. 60) கிடைத்துள்ளது. இதன் ஆசிரியர்
இன்னார் எனத் தெரியவில்லை. பிளினி என்பார் உயிரியல் நூல் ஒன்றையும்
(கி.பி. 70), தாலமி பூகோள நூல் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். இந்
நூல்களில் பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகத்தைப் பற்றிய சான்றுகள்
பல காணப்படுகின்றன. பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளை விளக்கும்
செய்திகள் சங்க இலக்கியங்களில் மலிந்து கிடைக்கின்றன. இவை அச்
சான்றுகளால் மெய்ப்பிக்கப் படுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள
அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் பல
வகையான புதைபொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சிறப்பானவை
ரோமாபுரியின் நாணயங்கள். பழந்தமிழகத்துடன் ரோமாபுரி
மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தின் விரிவை இந் நாணயங்கள்
எடுத்துக்காட்டுகின்றன. ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களின்
வாயிலாகத் தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றித் தெரிந்து
கொள்ளுகின்றோம். அவற்றில் பல துறைமுகங்களின் பெயர்கள்
உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான
தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும்,
பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் ரோமர்கள்
குறிப்பிட்டுள்ளனர். அவற்றைப் போலவே, தமிழகத்தின் கீழைக் கடற்கரைத்
துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும், நாகப்பட்டினத்தை
நிகாமா என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும், புதுச்சேரியைப்