பக்கம் எண் :

64தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

ஆரிய மொழியின் கூட்டெழுத்து வடிவங்கள், எழுத்துப் புணர்ச்சி முறைகள்,
சொற்சேர்க்கை மரபுகள் தமிழில் இடம் பெறவில்லை. எனவே, அவ்வாரிய
எழுத்தொலிகளையும் சொல்லமைப்புகளையும் தமிழில் சேர்ப்பதற்காகவே
பிற்காலத்தில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன. ஆரியக் கடவுளர்
தமிழகத்தில் சிறுதெய்வங்களாகவே விளங்கினர். சிந்துவெளி மக்களின்
பசுபதியும் பண்டைய தமிழரின் மாயோனும் சேயோனும் தொடர்ந்து தமிழரின்
வழிபாட்டைப் பெற்று வந்தனர். நாள் பட ஆரியர் மதக் கொள்கைகளையும்
தமிழர் பின்பற்றினர்.

     வடநாட்டுடன் வாணிகத் தொடர்பை மேற்கொண்ட தமிழகத்துக்கு
மற்றொரு சீர்கேடு விளையலாயிற்று. இனம், குலம், ஆகிய வேறுபாடுகளினால்
இடர்ப்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப்
பிரந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.
பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின்படியே வாழ்ந்து வந்த மக்கள் அவ்
வாழ்க்கையினின்றும் நழுவினர். முல்லை நிலத்து இடையனும் குறிஞ்சி
நிலத்துக் குறவனும் மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது ;
அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல்
நிலத்துப் பரதவப் பெண்ணைக் காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட இந்த இன்னல்களைக் கண்டு அஞ்சிப் பல
அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.
‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை
யான்’ என்று முதன்முதல் தமிழருக்கு எடுத்தோதியவர் திருவள்ளுவர். இக்
குறளை அறத்துப் பாலில் வைக்காது பொருட்பாலில் வைத்திருப்பது
குறிப்பிடத் தக்கதாகும். பொருட்பால் முழுவதும், மக்கள் சமூகத்தின்
வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். காலத்தால்
திருக்குறள் ஆசிரியருக்குப் பிற்பட்டவரான திருமூலரும், ‘ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும்’5 என்று கூறி மக்களைத் திருத்த முயன்றார். ஏழாம்
நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாதிரம்
பல பேசும் சழக்கர்கள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’6
என்று வினவுகின்றார். அவருக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்குப்
பிற்பட்டுத் தோன்றிய

    5. திருமந்திரம் - செய்யுள் எண் : 2104.
    6. தேவாரம் 5 : 60 : 3