பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 65

மாணிக்கவாசகரும், ‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேன்...’7 என்று சாதி வேறுபாடுகளை அறவே வெறுக்கின்றார்.
சாதி சமய வேறுபாடுகளை, மக்களை விழுங்கிவிடும் ஆற்றுநீர்ச் சுழலுக்கு
இவர் ஒப்பிடுகின்றார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான
இராமலிங்க அடிகளார், ‘சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அமயந்
தோற்றிய அருட்பெருஞ்சோதி’8 என்றும், ‘சாதிகுலமென்றும்... ஓதுகின்ற
பேயாட்டம்’9 என்றும் மக்கள் சமூகத்தை அலைத்து வருகின்ற சாதி
வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார்.

     தமிழர் மரபில் கலந்துவிட்ட ஆரியக் கருத்துகளும், சொற்களும்,
பண்பாடுகளும் இடத்திற்கேற்பத் தம் வடிவம் மருவித் தமிழ் வடிவை
ஏற்றுக்கொண்டதுமுண்டு. அதைப் போலவே, தமிழரின் கருத்துகளையும்
சொற்களையும், பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் ஆரியரும்
ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆடவன் அத்தை மகள் அம்மான் மகளை
மணப்பதும், பெண் அத்தை மகன் அம்மான் மகனை மணப்பதும்,
பெண்மக்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குங்குமப் பொட்டு அணிவதும்,
விருந்தினரை வரவேற்று அவர்கள் பிரிந்து விடைபெறும்போது அவர்கட்கு
வெற்றிலை பாக்குக் கொடுப்பதும், பெண்கள் விதவைக்கோலம் பூண்பதும்,
தமிழரின் வழக்கங்கள். இவற்றை ஆரியரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்மக்கள் வழிபட்ட தெய்வங்கள், சமயச் சடங்குகள், புராணக் கதைகள்
ஆகியவை ஆரியருக்கும் உரிமையாயின.

     ஆரியர்கள் தங்கள் வாழ்விற்கு இடந்தேடியும், மன்னரின் ஆதரவை
நாடியுமே தமிழகத்தில் வந்து குடியேறினார்கள். அவர்கள் தமிழருடன் போர்
புரியவில்லை ; போரிட்டு நாடு பிடிக்கவுமில்லை. ஆரியரின் ஊடுருவல்
தமிழகத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. அவர்கள் தமிழரோடு
தமிழராய்க் கலந்து தமிழரின் வாழ்க்கையையே தாமும் வாழ்ந்து தமிழரின்
வாழ்க்கை மரபுகளில் பல மாறுதல்களைப் படிப்படியாய் உண்டாக்கினார்கள்.

     ஆரியருக்கும் தமிழருக்குமிடையே பல போராட்டங்கள்
நேர்ந்தனவென்றும், அவற்றின் இறுதியில் ஆரியரே வெற்றி கண்டனர்
என்றும், அப் போராட்டங்களையே இராமாயணக்

     7. திருவாசகம், 31 : 5
     8. திருவருட்பா, அருட்பெருஞ்சோதி அகவல் : அடி 295-6 :
     9. திருவருட்பா 6ஆம் திருமுறை, சுத்த சிவநிலை, 22.