பக்கம் எண் :

66தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

காவியம் குறிப்பிடுகின்ற தென்றும், ஒரு சாரார் கூறுவர். புராணக் கதைகள்
வேறு, வரலாற்று நிகழ்ச்சிகள் வேறு என்பதை இங்கு நாம் மறந்துவிடலாகாது.
புராணக் கதைகள் பெரும்பாலும் கற்பனைப் படைப்புகள் ; அவற்றைக்
கொண்டு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகட்குக் காரணம் காட்டல் பொருந்தாது.
இராமாயணத்தைப்போலவே கந்தபுராணத்தையும் ஆரியர்-தமிழர்
போராட்டங்களின் விளைவு என்று கூறுதலும் ஏற்புடைத்தன்று.
கந்தபுராணத்தில் வரும் அகத்தியரானவர் இருக்கு வேதத்திலும், பல புராணக்
கதைகளிலும், தமிழ் இலக்கியத்திலும் தோற்றமளிக்கின்றார். தமிழில்
எழுந்துள்ள பிற்காலத்திய சித்தர் இலக்கியங்கள் பலவற்றுக்கு ஆசிரியராகவும்
விளங்குகின்றார். எனவே, அகத்தியரை ஆரியர் என்றோ, ஆரிய
மொழியையும், ஆரியக் குடியேற்றத்தையும் தமிழகத்துக்குக் கொண்டு வந்தவர்
என்றோ, அன்றித் தமிழகத்தில் தமிழ் பயிற்றுவிக்க வந்தவர் என்றோ கூறும்
செய்திகள் யாவும் வெறும் கற்பனைகளேயன்றி வரலாற்று நிகழ்ச்சிகள் அல்ல
என்பது தோற்றம். எனினும், அகத்தியர் யாராக இருந்திருப்பர் என்ற
ஆராய்ச்சியில் ஆய்வாளர் பலர் ஊக்கங் காட்டி வருவது இயல்புதான்.
அகத்திய முனிவர் கயிலைமலையில் வாழ்ந்தவராகவும், விந்திய மலையின்
செருக்கையடக்கியவராகவும், பொதிகைமலையில்வந்து தங்கியவராகவும்
கந்தபுராணம் தெரிவிக்கின்றது. அகத்தியர் மலய மலையில் வாழ்பவர் எனப்
பாகவதமும் மச்ச புராணமும் குறிப்பிடுகின்றன. அவர் ஆனைமலையில்
வாழ்பவராகவும் கூறுவர். சிவபுராணங்களில் அவர் வேடராகவும்,
வில்லியாகவும் காட்சி தருகின்றார். அகத்தியர்கள் அரக்கக் குலத்தினர்
என்றும், புலத்தியரின் மகனான அகத்தியர் ஒருவர் இராவணனின் முன்னோர்
என்றும் வாயுபுராணம் பேசுகின்றது.

     அகத்தியர் அனைவருமே ஏதேனும் ஒரு மலையுடன் தொடர்பு
கொண்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அகத்தியர்களுக்கும்
தமிழ்நாட்டுக்குமிடையே நெருங்கியதொரு தொடர்பும் இருந்ததாகத்
தெரிகின்றது. எனவே, அகத்தியர்கள் தமிழர் என்றும், புராண வரலாற்றுத்
திரிபுகளின் மூலம் ஆரியராக்கப் பெற்றனர் என்றும் ஊகிக்க
இடமேற்படுகின்றது.

     தொல்காப்பியம் ஆக்கப்படுவதற்கு முன்பு ‘அகத்தியம்’ என்றோர்
இலக்கண நூல் வழங்கி வந்ததாகவும் கூறும் மரபு ஒன்று உண்டு.
எல்.டி.பார்னெட் என்பார் இதைப்பற்றித் தம்