கருத்தைத் தெரிவிக்கின்றார். ஆரியர்கள் தமிழகத்துக்கு வந்து குடியேறிய பின்பு, தம் நாகரிகத்தினைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளைச் சுருக்குவதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாய் எழுந்ததொரு கற்பனையாகும் இஃது என்று அவர் கூறுகின்றார். அகத்தியரைப் பற்றிய புராணக் கதைகளும் இத்தகைய நோக்கத்தின் அடிப்படையில் எழுந்தவையேயாம் என்று கருத வேண்டியுள்ளது. தமிழரின் சமயம், சமூக வாழ்வு, மொழி, இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய துறைகளெல்லாவற்றிலும் ஆரியர்கள் தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்து வந்தனர். மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன ; ஆரிய வடிவத்தை ஏற்றன. ஆரியர் தம் பழக்க வழக்கங்கட்கும், மொழிக்கும் எத்துணை ஏற்றம் கற்பிக்க வேண்டுமோ அவ்வளவும் கற்பிக்கவும், அவற்றையே தமிழரின் வாழ்க்கை முறையில் ஆட்சியில் நிறுத்தவும் நுண்ணிய திட்டங்கள் பல செயற்படுத்தி ஓரளவு வெற்றியுங் கண்டார்கள். அவர்கள் புனைந்த புராணக் கதைகள் எல்லாம் அவ் வெற்றிக்குத் துணைபுரிந்தன. எடுத்துக்காட்டாக, விசுவாமித்திர முனிவருக்கு மக்கள் ஐம்பதின்மர் என்றும், அவர்களின் வழிவந்தவர்களை ஆந்திரர், புண்டரர், சபரர், புலிந்தர், முதிபர் ஆகியவர்கள் என்றும், அவர்கள் அனைவருமே ‘தாசர்கள்’ என்றும் ஐந்திரேய பிராமணம் என்னும் சமஸ்கிருத நூல் கூறுகின்றது. இப் பெயர்களை ஏற்ற நாடுகள் யாவற்றிலும் ஆரியர் குடியேறி அங்கெல்லாம் தம் நாகரிகத்தை வளர்த்துக் கொண்ட செய்தியையே இந்த ஐந்திரேய பிராமணம் எடுத்துக் கூறுகின்றது போலும். வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி என்பார் (சு.கி. மு. 600) வடநாட்டுப் பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர். அவர் நருமதைக்குத் தெற்கில் கலிங்கத்தை மட்டுங் குறிப்பிடுகின்றார் ; ஆனால், தென்னாட்டைக் குறிப்பிடவில்லை. அவருக்குக் காலத்தால் பிற்பட்டவரான காத்தியாயனர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) தம் இலக்கண நூலில் தென்னிந்திய நாடுகள் அனைத்தையுமே குறிப்பிடுகின்றார். இதைக் கொண்டு வடநாட்டு ஆரியர்கள் கி.மு.600-க்குப் பிறகே தமிழகத்திற்கு வந்து குடியேறியிருக்கவேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. ஆதியில் ஆடுமாடு மேய்த்து வயிறு பிழைத்து நிலையற்ற வாழ்க்கையை நடத்திவந்த ஆரியர்கள் கங்கை வெளியில் பரவிக் |